கேட்ச் பிடிக்க வந்த பவுலரை அப்பட்டமாக தடுத்த மேத்யூ வேட் – வீடியோ இணைப்பு!

0
691
Aus vs Eng

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியோடு 20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடந்தது!

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இடம் பெறாத மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றார்.

- Advertisement -

காயத்திற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பிய அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரும் இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தர களம் இறங்கினார்கள். இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் 68 ரன்களை 4 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் நொறுக்கி தள்ளினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ் 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடக்கம். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 208 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரின் ஒரு ரன்னில் வெளியேறினார். மிச்செல் மார்ஸ் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் பின்ச் 12 ரன்னில் வெளியேற, களத்திற்கு வந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வார்னர் உடன் இணைந்து ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றார்.

14 ஓவரில் 152 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று ஆஸ்திரேலிய அணி மிகவும் பலமாக இருந்த நிலையில், 15வது ஓவரை வீசிய மார்க் வுட் ஆறு ரன்களை மட்டுமே கொடுத்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரது விக்கெட்டையும் கைப்பற்றினார். மீண்டும் 16வது ஓவர் வீச வந்த மார்க் வுட் 4 ரன்கள் மட்டுமே தந்து, மிகச் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னரை 73 ரன்னில் வெளியேற்றி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாதை அமைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட 7 ரன்கள் மட்டுமே எடுத்து 200 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்து தோல்வியைத் தழுவியது. அலெக்ஸ் ஹேலஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் போது மார்க் வுட் கடைசி கட்டத்தில் பந்துவீசிய பொழுது, ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தூக்கி அடித்த பந்து ஒன்று அவருக்கு மேலே கிளம்பியது, அதை ஓடிவந்து மார்க் வுட் பிடிக்க முயன்ற பொழுது, அவரை கைவைத்து மேத்யூ வேட் தடுத்தது தெளிவாக கேமராவில் பதிவாகியது. ஆனாலும் நடுவர் அவுட் தரவில்லை. இதற்கான ட்வீட்டர் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.