முக்கிய வீரர் காயம் காரணமாக விலகல்! அணிக்கு பெருத்த அடி!

0
1193

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் காயம் காரமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் டிசம்பர் 1 முதல் 5 வரை ராவல்பிண்டி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 9 முதல் 13 வரை முல்தான் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 17 முதல் 21 வரை கராச்சி மைதானத்திலும் நடைபெறுகிறது.

இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. டி20 உலக கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் வெளியில் அமர்ந்திருந்த இங்கிலாந்து அணி நட்சத்திர பவுலர் மார்க் உட் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என தெரிய வந்திருக்கிறது.

முதல் டெஸ்ட் துவங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், மார்க் முதல் டெஸ்ட் போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட மாட்டார் என உறுதி செய்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 தொடரின் போது, மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்குள் வந்தார் மார்க் உட். அதற்கு முன்னர் காயம் காரணமாக சில மாதங்கள் வெளியில் இருந்தார். இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

மேலும் ஐசிசி டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துரதிஷ்டவசமாக நாக்கவுட் சுற்றுகளில் இவரால் விளையாட முடியவில்லை. சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய போட்டியின் போது, இவர் 154.74 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து உலகக்கோப்பை டி20 தொடரின் அதிவேக பந்தாக அமைந்தது.

டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்து வந்த இவர், தற்போது இல்லாதது வேகப்பந்துவீச்சில் பின்னடைவை தந்திருக்கிறது. இருப்பினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் அணிக்கு திரும்புவார் என பயிற்சியாளர் மெக்கல்லம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.