இந்த ஆஸ்திரேலிய வீரரை ஷாஹீன் அப்ரிடி திணற வைப்பார் – எச்சரிக்கை அளிக்கும் மார்க் வாக்

0
388
Shaheen Afridi and Mark Waugh

2019-2020ஆம் ஆண்டில் கடைசியாக ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதின. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் மிக அற்புதமாக விளையாடி இருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 154 ரன்கள் அதேபோல 2வது டெஸ்ட் போட்டியில் 335* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சுலபமாக வெற்றி பெற மிக முக்கிய காரணமாக டேவிட் வார்னர் இருந்தார் என்று சொல்லுவதே சரி.

- Advertisement -

தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரும் இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளனர். மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி 20 போட்டியுடன் சுற்றுப்பயணம் முடிய இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த பந்து வீச்சாளரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்

இருபத்தி ஒரு வயதான இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக சமீப நாட்களில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சை சரியாக கணிக்காமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் கூட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இவர்தான் கைப்பற்றினார்.

- Advertisement -

இவர் சம்பந்தமாக பேசியுள்ள மார்க் வாக் “ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீப நாட்களில் டேவிட் வார்னர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சற்று சுமாராகவே விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் மார்க் வுட் பந்து வீச்சுக்கு எதிராக டேவிட் வார்னர் தடுமாறியதை நாம் பார்த்தோம்.

எனவே பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் குறிப்பாக டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை கவனமாக கணித்து ஆட வேண்டும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் எந்த திசையிலும் எதிரணி வீரரை திணறடிக்க கூடிய திறன் படைத்தவர். எனவே அவரை சற்று நிதானமாக கையாள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10:30 மணி அளவில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.