நான் அணியில் இடம் பெறாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர் – பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட்டர் பேச்சு

0
281
Pakistan Cricket Team

இன்று பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் ஆசமிற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, புகழில் சற்றே ஏறக்குறைய, வலக்கை துவக்க ஆட்டக்காரர் அகமது சேஷாத்திற்கும் சில வருடங்களுக்கு முன் இருந்துள்ளது. சில முக்கியமான ஆட்டங்களை பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார். மேலும் ஒரு நல்ல பீல்டர் என்பதால், அவர் களத்தில் பிரகாசித்துக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து அவர் பேசும் பொழுது, இந்தியாவில் விராட் கோலிக்கு மகேந்திர சிங் தோனி இருந்தார். ஆனால் எனக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்படி யாரும் இல்லை. சொந்த மக்களே கூட ஒரு வீரனின் வெற்றிக்குப் பின்னால் நிற்க மாட்டார்கள். பாகிஸ்தான் சக அணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரனின் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாவே இருக்கிறார்கள் என்று கடுமையாய் குற்றம் சாட்டி பேசியிருந்தார். இது பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் விவாதமாகவே மாறி இருந்தது.

- Advertisement -

அகமத் சேஷாத் கையில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாள் போராடி வந்தார். இதனால் அவருக்கு கையில் 32 தையல்கள் போடுமளவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர் இந்தக் காயத்திலிருந்து குணமடைய ஏறக்குறைய ஒரு வருடம் எடுத்தது. ஆனால் இவர் குணமாகி வந்த பின்னும், இந்தக் காயத்தைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு பி.எஸ்.எல் தொடரில் இவர் தேர்வாகவில்லை. இதெல்லாம் இவரை கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தற்போது மீண்டும் இதைப்பற்றி அகமத் சேஷாத் சில கருத்துக்களைக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். ஏற்கனவே அவரது கருத்துக்கள் பல கலவையான விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் உண்டாக்கி இருந்த நிலையில், நிச்சயம் தற்போது அவர் பேசியுள்ளதும் விவாதமாக சர்ச்சையாக மாறவே அதிக வாய்ப்புள்ளது.

அவர் இதையும் சேர்த்தே பேசியுள்ளார், அதில் “சமூக ஊடகங்கள் தாண்டியும் வெளியே ஒரு உலகம் உள்ளது. நான் வெளியில் இரசிகர்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது, நான் அணியில் இடம் பெறாததால் அவர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து விட்டதாகவும், பழைய பாகிஸ்தான் அணியையே அவர்கள் அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. பல துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் விதி பல மர்மமான முறைகளில் செயல்படக்கூடியது. நாம் தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்!