டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனைகள் – மஹேல ஜெயவர்த்தனா!

0
148
Jayawardene

கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியதை அடுத்து, இந்திய அணிக்குள் பல மாற்றங்கள் நடந்தது. புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் வந்தார்கள். அணிக்குள்ளும் புதிய வீரர்கள் வந்தார்கள். புதிய அணுகுமுறையில் ஆட்டத்தைக் கையாண்டார்கள். புதிய அணி கலாச்சாரம் உருவாக்கப்பட்டது.

இப்படி எல்லாம் புதியதாகச் சிறப்பாகச் செய்யப்பட்டாலும் இந்த இந்திய அணியில் மீண்டும் பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது. அந்தப் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் ஜடேஜா காயத்தால் வெளியேறியதும், ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் சரியான முறையில் பேட்டிங் செய்யாததும் தான்.

- Advertisement -

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் ஜடேஜா அணிக்குள் இருக்கும்பொழுது, அவரை ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆக வைத்துக்கொண்டு, வலதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் பினிஷர் தினேஷ் கார்த்திக்கை விளையாட வைத்தார்கள்.

இதற்கடுத்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுத்து ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் விளையாட வைத்தார்கள். ஆனால் சூப்பர் 4 சுற்றில் ஜடேஜா காயமடைந்து வெளியேற, தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணிக்குள் வந்தார்.

இவர் வந்த பிறகு சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் இலங்கை அணிகள் இடம் இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணத்தால் இந்திய அணி தோல்வியை தழுவியது ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இதையடுத்து கடைசியாக ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்குள் வந்தார்.

- Advertisement -

இப்படி ஜடேஜாவின் காயமும், ரிஷப் பண்ட்டின் சீரற்ற பேட்டிங்கும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய தலைவலியை உருவாக்கி வருகிறது. தற்பொழுது அணியில் விக்கெட் கீப்பராக யாரை வைப்பது? இடதுகை பேட்ஸ்மேன் தேவைக்கு என்ன செய்வது? ரிஷப் பண்ட் உள்ளே வந்தால், நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சூரிய குமாருக்கு பேட்டிங்கில் எந்த இடத்தை தருவது? என்பது போன்ற குழப்பங்கள் நீடிக்கின்றன.

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்த்தன ” ஜடேஜா இல்லாத இந்த நேரம் இது ஒரு சவாலான நேரம். அவர் நம்பர் ஐந்தில் நன்றாக பொருந்தினார். அந்த இடத்தில் அவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து நன்றாக விளையாடினார். அவரும் பாண்டியாவும் முதல் ஆறு இடத்தில் இருப்பது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை நெகிழ்வாக வைத்திருக்கும். தற்போது அவர் இல்லாதது பெரிய பிரச்சனை ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இது இந்திய அணிக்கு கவலையான விஷயம். அவர் இல்லாததால் இடதுகை வீரர் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இதனால் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை விட்டுவிட்டு ரிஷப் பண்ட்டை நம்பர் 4-ஆம் இடத்திற்கு கொண்டுவந்து வைத்துள்ளார்கள். அவர்கள் உலகக்கோப்பைக்கு செல்லும் முன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் ஜடேஜா மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்தார். அவர் இல்லாமல் போனது இந்திய அணிக்கு பாரிய இழப்பாகும் ” என்று கூறியிருக்கிறார்!