லக்னோ அணியின் பெயரை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள அணியின் உரிமையாளர் – வாக்களிப்பு மூலம் தேர்வு

0
948
KL Rahul Lucknow Supergiants

இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடந்த இதில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மூன்று போட்டிகளிலும் தோல்வி பெற்று ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இந்தத் தோல்வியிலிருந்து மீள இந்திய ரசிகர்கள் தற்போதே வரும் மார்ச் மாத கடைசியில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் முன்புபோல 8 அணிகள் பங்கேற்காமல் 10 அணிகள் பங்கேற்கும் தொடராக இது நடக்க உள்ளது. 2 புதிய அணிகளாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பதாகவே 3 வீரர்களை மட்டும் ஒப்பந்தம் செய்துகொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்தது. அதன்படி லக்னோ அணி சார்பில் ராகுல், ஸ்டோனிஸ் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ அணியின் அதிகாரப்பூர்வமான பெயரை இன்று அந்த அணியின் உரிமையாளர் அறிவிப்பார் என்ற தகவல் முன்னமே வெளியானது. இந்த அணி ஏற்கனவே சமூக வலைதளங்களில் வாக்கெடுப்பு மூலம் ரசிகர்களை அணியின் பெயரை பரிந்துரைக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி பல ரசிகர்கள் ஆர்வமாக இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அந்த அணிக்கு புதிய பெயரை சூட்டுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த அணியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அணியின் உரிமையாளர் அறிவித்திருக்கிறார்.

பிரபல விளையாட்டு பத்திரிக்கையாளர் போரியா அவர்களுடன் நடந்த நேர்காணலில் அந்த அணியின் உரிமையாளர் பெயரை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நாங்கள் வாக்கெடுப்பு நடத்தி ரசிகர்களை பெயரை பரிந்துரைக்க சொல்லிய போது, அதிகமானோர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயரை பரிந்துரைத்ததாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே உரிமையாளர் தான் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகள் தடையில் இருந்த போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற அணியின் உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புனே அணி 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதேபோல இந்த ஐபிஎல் தொடரிலும் இவரது லக்னோ அணி அங்கு விளையாடும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.