லக்னோ அணியில் இருந்து திடீரென விலகிய மார்க் வுட் ; மாற்று வீரராக பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு

0
57
Mark Wood LSG

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி நிர்வாகம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை 7 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றியிருந்தது. ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கு முன்பாக முழங்கை காயம் காரணமாக அவர் தற்பொழுது வெளியேறி உள்ளார்.

அவருக்கு தகுந்த மாற்று வீரரை லக்னோ அணி நிர்வாகம் தேடி வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் பங்களாதேஷை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை மாற்று வீரராக விளையாட வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகbதகவல் வெளியாகி உள்ளது.

பங்களாதேசை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்

இருபத்தி ஆறு வயதான பங்களாதேசை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹமத். 107 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 119 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 33 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருபத்தி மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீச கூடிய திறமை பெற்ற அவரை தற்போது லக்னோ அணிக்கு விளையாட வைக்க நடவடிக்கைகளை கௌதம் கம்பீர் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன முடிவு எடுக்கப் போகிறார் அஹமத்

தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் டஸ்கின் அஹமத் விளையாடி வருகிறார். அதன் பின்னர் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரிலும் டஸ்கின் அஹமத் இடம் பெற்றிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் சலுகையை கௌதம் கம்பீர் டஸ்கின் அஹமத்திடம் தெரிவித்து விட்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாட டஸ்கின் அஹமத் சம்மதம் தெரிவித்தால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வேண்டும்.

கௌதம் கம்பீர் கூறிய நிபந்தனையின்படி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் இருந்து முழுவதுமாக விளையாட வேண்டும். எனவே ஐபிஎல் தொடரில் விளையாடும் சலுகையை ஏற்றுக் கொள்வதென்றால், டெஸ்ட் தொடரை டஸ்கின் அஹமத் தொடரில் இருந்து வெளியேறி அவர் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதே நிபந்தனை.

இது சம்பந்தமான முடிவெடுக்க கால அவகாசத்தை டஸ்கின் அஹமத் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அவர் தற்பொழுது பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்திடம் பேசி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இறுதியில் டஸ்கின் அஹமத் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.