DLS விதியை பார்த்து.. பட்டையை கிளப்பிய பகார் ஜமான்.. பாகிஸ்தான் வரலாற்றில் அதிரடி சாதனை.. நியூசிலாந்துக்கு சிக்கல்!

0
1617
Fahar

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி தற்பொழுது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். பாகிஸ்தான அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பிரதான சுழற் பந்துவீச்சாளர்கள் யாருக்கும் அணியில் இடமில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் நியூசிலாந்து அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றார்கள். அந்த அணியில் பிரதான இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. வீரர்கள் நிறைய பேர் காயத்தில் இருப்பதால் நியூசிலாந்து இந்த முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்தரா 108 ரன்கள் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்துக் கொடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் ஆரம்பத்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஒத்துழைப்பு தர ஆரம்பித்தார். இன்னொரு முனையில் பகார் ஜமான் அதிரடியில் நொறுக்கி தள்ளினார்.

முதல் பத்து ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்த பத்து ஓவர்களிலும் பாகிஸ்தான் அணியின் இந்த ஜோடியின் அதிரடி நிற்கவில்லை.

மிகச் சிறப்பாக விளையாடிய பகார் ஜமான் 19.2 ஓவரில் 63 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். மேலும் 20 ஓவர்களுக்குள் உலகக் கோப்பையில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

தற்பொழுது மழை குறுக்கிட்டு இருக்கின்ற காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 21.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருக்கிறது. பகார் ஜமான் 106 மற்றும் பாபர் அசாம் 47 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.

தற்பொழுது பாகிஸ்தான் அணி இந்த நிலையில் டக்வொர்த் லீவிஸ் விதிக்கு 10 ரன்கள் முன்னணியில் இருக்கிறது. பகார் ஜமான் இந்த விதியை பார்த்து பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாடி, தற்பொழுது பாகிஸ்தான் அணியை முன்னணியில் வைத்திருக்கிறார். மழை தொடர்ந்து பெய்தால் பாகிஸ்தான் அணி வென்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!