போட்டியின் 20வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த டாப் 4 இந்திய வீரர்கள்!

0
210

டி20 போட்டிகளின் 20 வது ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண்போம்

கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் துவக்க ஓவர்கள் எவ்வளவு முக்கியமோ! அதேபோன்று கடைசி சில ஓவர்கள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஓவர்களில் விக்கெட் இழக்காமல் பொறுமையாக விளையாடி குறைந்த ரன்ரேட்களில் பேட்டிங் செய்து, கடைசி சில ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு பேட்ஸ்மேன்கள் பலர் முயற்சிப்பர். அதனை பினிஷிங் ரோல் என்றும் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம்.

- Advertisement -

பெரும்பாலும் ஆல்ரவுண்டர்கள் இந்த ரோலை மிகச் சிறப்பாக செய்து வந்திருக்கின்றனர். அதே நேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் களமிறங்கி மிடில் ஓவர்களில் நிதானமாக விளையாடி ‘டெத் ஓவர்கள்’ எனப்படும் கடைசி சில ஓவர்களில் மட்டும் மளமளவென பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை விலாசி அணியின் ஸ்கோரை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் செயல்களையும் சில பேட்ஸ்மேன்கள் செய்திருக்கின்றனர்.

முதலில் பேட்டிங் செய்யும் அணி எதிரணியை திணற வைப்பதற்கும், மேலும் எட்ட முடியாத இலக்கை நிர்ணயிப்பதற்கும் இந்த டெத் ஓவர்களில் குறைந்தபட்சம் 12 முதல் 15 வரை ரன்ரேட் வைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் அதிக விக்கெட்களும் இந்த சில ஓவர்களில் தான் விழும் என்பதால் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.

குறிப்பாக, டி20 போட்டிகளில் 20வது ஓவர் என்பது மிக முக்கியமான ஓவராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 10-20 ரன்கள் குறைவாக இருக்கும் பொழுது, அந்த ஓவரில் நன்றாக விளையாடினால் வெற்றியைப் பெற்றுத் தரும் ஸ்கோராகவும் மாற்றலாம். அந்த வகையில் ஒரு போட்டியின் இருபதாவது ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண்போம்.

- Advertisement -

போட்டியின் இருபதாவது ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்

1. சூரியக்குமார் யாதவ் – 26 ரன்கள் v ஹாங்காங், 2022

2. ரோகித் சர்மா – 19 ரன்கள் v வெஸ்ட் இண்டீஸ், 2018

3. தீபக் சஹர் – 19 ரன்கள் v நியூசிலாந்து, 2021

4. சூரியக்குமார் யாதவ் – 19 ரன்கள் v வெஸ்ட் இண்டீஸ், 2022

இந்த பட்டியலில் ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ், 26 பந்துகளில் 68 ரன்கள் விலாசி இந்திய அணியின் ஸ்கோரை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். அதில் குறிப்பாக, 20 வது ஓவரில் பேட்டிங் செய்த ஆவார். 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 26 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் இதே ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட போது அந்த அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியின் 20வது ஓவரில் 19 ரன்கள் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து முதலிடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து முதல் இடத்திற்கு தனி ஆளாக முன்னேறி இருக்கிறார்.

ஹாங்காங் அணிக்கு எதிரான இதே போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் கடந்து, அதிலும் ஒரு சாதனையை ரோகித் சர்மாவுடன் சமன் செய்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ், 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் கடக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும். ஒரு ஆண்டில் 200+ ஸ்ட்ரைக் ரேட் வைத்து அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து அதிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறார் சூரியகுமார் யாதவ். ஒரே போட்டியில் இப்படி எண்ணற்ற சாதனைகளை இவர் முறியடித்திருப்பது இவரது சிறந்த பார்மை காட்டுகிறது. விரைவில் வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.