ரிஷப் பண்ட்டிடம் மகேந்திர சிங் தோனியைப் பார்க்கலாம் – இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆச்சரியக் கருத்து!

0
103
Rishab

ஒரு காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டிங் செய்வது என்பது அவசியமான ஒன்றாக இருந்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் வருகைக்குப் பிறகு, உலகின் எல்லா நாடுகளும் தங்கள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டிங்கும் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்தனர்.

இதையடுத்து பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வெளிவர ஆரம்பித்தார்கள் இதில் மிக முக்கியமானவர்கள் இலங்கை அணியின் குமார் சங்ககரா, இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி. இதில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் அணியின் தலைவராகவும் மிகச் சிறந்த சாதனைகளை வைத்திருந்தார். இரண்டு உலக கோப்பைகளை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்த கேப்டன்.

இவரது ஓய்வுக்குப் பிறகு இவர் வகித்து வந்த விக்கெட் கீப்பிங் மற்றும் ஆட்டத்தை நிறைவு செய்யும் பேட்ஸ்மேன் இந்த இடங்களுக்கு சரியான ஒரு மாற்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை கண்டறிய வேண்டிய தேவை இந்திய அணி நிர்வாகத்திற்கு இருந்தது. ஆனால் மகேந்திர சிங் தோனி போன்ற ஒரு மிகப்பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

இதை உணர்ந்தே மாற்று வீரரை தேட ஆரம்பித்தார்கள். அந்தத் தேடலில் வந்தவர்தான் ரிஷப் பண்ட். ஆனால் மகேந்திர சிங் தோனிக்கு மாற்று வீரர் என்கின்ற பொழுது அதனால் உருவாகும் அழுத்தமும் நெருக்கடியும் அளவுக்கு அதிகமானது. திறமை இருந்தாலும் அனுபவம் இல்லாத இளம் வீரராக இருந்த ரிஷப் பண்ட், இப்படி உருவான அழுத்தத்தையும் நெருக்கடியையும் ஆரம்பத்தில் சமாளிக்க முடியாமல் மிகவும் தடுமாறிப் போனார்.

இந்திய அணியின் கேப்டன்கள் அவருக்கு மிகச்சிறப்பான ஆதரவைத் தொடர்ந்து அளித்து வந்தார்கள். பின்பு கடுமையாக உழைத்து விக்கெட் கீப்பிங்கில் இருந்த தவறுகளை சரி செய்தார். இதற்கடுத்து பேட்டிங்கும் கொஞ்சம் சரியானது. வெள்ளைப் பந்து கிரிக்கெட் அதிரடி வீரராக அறியப்பட்ட ரிஷப் பண்ட் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் முக்கிய பேட்ஸ்மேனாக மாறிப்போனார். அவருக்கென்று இப்பொழுது நிரந்தர இடம் இருப்பது சிவப்புப் பந்து இந்திய அணியில் தான்.

தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் இருப்பதாக தோன்றினாலும், அது உறுதியற்ற நிலையில் தான் இப்போது கூட இருக்கிறது. இந்தியா டி20 அணியில் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று இருந்தாலும், அவருக்கு ஆடும் அணியில் இடம் இப்பொழுதும் நிரந்தரம் இல்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இதுபற்றிக் கூறும்போது “நிபந்தனைகள் என்ன சொல்கிறதோ, அதற்கு என்ன தேவையோ அப்படிப்பட்ட அணிதான் தேர்வு செய்யப்படும்” என்று ரிஷப் பண்ட்டை வெளியில் வைத்து இருப்பது தொடர்பாக கூறியிருந்தார்.

இப்பொழுது ரிஷப் பண்ட் பற்றி இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சில முக்கியமான கருத்துக்களை, மகேந்திர சிங் தோனி உடன் இவரை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மெருகேறி இருப்பதற்கு பின்னால் இவரது பங்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர் இது பற்றி கூறும் பொழுது “அவரிடம் நீங்கள் கொஞ்சம் மகேந்திர சிங் தோனியை பார்க்கலாம். நீங்கள் ஒருவருக்கு பதிலாக ஒருவரை உருவாக்கும் பொழுது, யாருக்கு பதிலாக உருவாக்குகிறீர்களோ அவர்களின் தாக்கத்தை அவர்களில் பார்க்க முடியும். இதனால் உங்களால் ரிஷப் பண்ட் இடம் மகேந்திர சிங் தோனியை பார்க்க முடியும். ஏனென்றால் ரிஷப் பண்ட் தனக்கு பெரியவர்களைப் பார்த்து பழகி மதித்து வளர்ந்து வந்தார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரிஷப் பண்ட் பற்றி அவர் கூறியிருப்பதாவது ” ரிஷப் பண்ட் மிகவும் நட்பான ஜாலியான ஒரு மனிதர். அவர் களத்திற்கு வெளியேயும் சிரிப்பதை விரும்பக் கூடியவர். அவர் களத்திற்கு வெளியே இருக்கும் பொழுது எல்லாவற்றிலும் இருந்து விலகி மிகவும் நிதானமாக இருப்பார். அவர் நிறைய வேடிக்கை பார்ப்பார். அவர் மற்ற விளையாட்டுக்கள் நிறையவற்றை பார்க்கக் கூடியவர். அவர் ஒரு அற்புதமான மனிதர் ” என்று ரொம்ப நுண்மையாக விளக்கிக் கூறியிருக்கிறார்!