இங்கிலாந்து மைதானத்திற்கு கவாஸ்கர் பெயர் வைத்து கவுரவம் !

0
97
Sunil Gavaskar ground leicester

மாடர்ன் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அடையாளமாகத் திகழக் கூடியவர் சச்சின் டெண்டுல்கர் என்றால், மரபு கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய அடையாளம் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் காலத்தில் அதிக ரன்கள் குவித்தவர், அபாயகரமான வெஸ்ட் இன்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களது மண்ணிலேயே, ஹெல்மெட் இல்லாமல் சந்தித்து ஆயிரக்கணக்கான ரன்களை குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியவர்!

தற்பொழுது இந்திய வீரர் எவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கெளரவம் ஒன்று சுனில் கவாஸ்கருக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் உலகளாவிய கிரிக்கெட் தூதராக விளங்கக் கூடிய சுனில் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவின் கென்டக்கி மற்றும் தான்சானியாவில் சான்சிபாரில் மைதானங்கள் உள்ளது. தற்பொழுது இங்கிலாந்தின் லீசெஸ்டரில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு அவரது பெயர் சனிக்கிழமை சூட்டப்பட உள்ளது. இந்த மைதானம் 15 ஏக்கர் பரப்பளவில் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இந்தக் கெளரவத்தை பெறும் முதல் இந்தியர் சுனில் கவாஸ்கர்தான்.

- Advertisement -

32 ஆண்டுகளாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் லீசெஸ்டரைப் பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கீத் வாஸ் அவரின் முயற்சியால் இது சாத்தியமாகி இருக்கிறது. பாரத் ஸ்போர்ட்ஸ் மற்றும் கிரிக்கெட் கிளப்பிற்கு சொந்தமான இந்த மைதானத்தில் தனது பெயர்ப் பலகையைத் திறந்து வைக்க சுனில் கவாஸ்கர் செல்கிறார். பெவிலியனில் ஒரு பெரிய சுவற்றில் முழுதாய் சுனில் கவாஸ்கரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது!

இது குறித்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் கூறப்படும் பொழுது “கவாஸ்கர் இந்த ஆடுகளம் மற்றும் மைதானத்தைத் தன் பெயரில் ஏற்க சம்மதித்தில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு வாழும் ஜாம்பவான். மேலும் பல சாதனைகளைப் படைத்து அதை மற்ற வீரர்கள் உடைக்க வழிவகை செய்து தந்திருப்பவர். அவர் எங்களுக்கு லிட்டில் மாஸ்டர் மட்டுமல்ல, அவர் விளையாட்டின் மாஸ்டரும் கூட. எல்லாக் காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் எங்களைச் சந்திக்க வருவதைவிட லீசெஸ்டர் வாழ் இந்திய மக்களை மகிழ்விக்கக் கூடியது எதுவுமில்லை. பிரிட்டனின் ஒருபகுதியான லீசெஸ்டர் எப்போதும் கவாஸ்கரின் ஒருபகுதியாக இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கெளரவத்தைப் பெற்றுள்ள சுனில் கவாஸ்கர் கூறும்பொழுது “லீய்செஸ்டரில் உள்ள ஒரு மைதானத்திற்கு என் பெயர் சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். லீய்செஸ்டர் நல்ல வலுவான கிரிக்கெட் ஆதரவாளர்களைக் கொண்ட நகரம். குறிப்பாக இந்திய கிரிக்கெட்டிற்கு அதிக ஆதரவாளர்கள் அங்குண்டு. எனவே இது எனக்கு மிகப்பெரிய கெளரவம்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்!

- Advertisement -

வெஸ்ட் இன்டீஸ் சென்றுள்ள இந்திய அணி இன்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், டிரினிடாட் டொபாக்கோ, போர்ட் ஆப் ஸ்பெய்ன், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்குப் பிறகு நாளை சுனில் கவாஸ்கர் இங்கிலாந்தில் கெளரவிக்கப்பட உள்ளார்!