ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் இதுவரை பெற்ற மிக குறைவான புள்ளிகள்

0
1252
MS Dhoni and Virat Kohli

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கும் அணிகள், முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டி வரை சிறப்பாக விளையாடினால் மட்டுமே இறுதியில் தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்ல முடியும். இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் லீக் சுற்று ஆட்டங்களில் மிக சிறப்பாக விளையாடி நிறைய முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரு அணி என்று பார்த்தால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். ஆனால் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தது.

சென்னை அணியை போலவே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளும் ஒருசில ஐபிஎல் சீசன்களில் மிக சிறப்பாக விளையாடியும், அதே சமயம் ஒருசில சீசன்களில் சற்று மோசமாகவும் விளையாடி உள்ளன. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் மோசமாக விளையாடி, மிகக் குறைவான புள்ளிகளை பெற்ற விவரத்தை தற்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் – 12 புள்ளிகள் ( 2020ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் )

மேல் குறிப்பிட்டு கூறியிருந்தது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மட்டுமே மிக சுமாராக விளையாடியது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. அதன் காரணமாக லீக் சுற்று போட்டிகளின் முடிவில் அந்த அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களில் கடந்த ஆண்டு சென்னை அணி பெற்ற 12 புள்ளிகள் தான் அந்த அணி பெற்ற மிகக் குறைவான புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ் – 4 புள்ளிகள் ( 2014ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் )

கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் டெல்லி அணி ஆரம்ப காலகட்டத்தில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது கிடையாது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அந்த அணி ஆரம்ப காலகட்டங்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் திக்குமுக்காடிய அணியாக விளங்கியது.

- Advertisement -

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்து கொண்டது. 2015ம் ஆண்டில் டெல்லி அணியில் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், டுமினி, குவின்டன் டி காக், தினேஷ் கார்த்திக், மயங்க் அகர்வால் மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்கள் இருந்தனர். நட்சத்திர வீரர்களை கொண்டு அந்த ஆண்டு டெல்லி அணி விளையாடினாலும் வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் டெல்லி அணி வெளியேறியது.

பஞ்சாப் கிங்ஸ் – 6 புள்ளிகள் (2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்)

2014ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கடைசி நேரத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பஞ்சாப் அணி தவற விட்டது. இருப்பினும் அதற்கு அடுத்த ஆண்டு 2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் நிச்சயமாக பஞ்சாப் அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர்.

ஜார்ஜ் பெய்லி தலைமையில் சேவாக், மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், டேவிட் மில்லர், முரளி விஜய் மற்றும் ஷான் மார்ஷ் என அதிரடி வீரர்களுடன் 2015ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி களமிறங்கியது. அனைவரும் எதிர்பார்த்தது போல் பஞ்சாப் அணி விளையாடாமல் சற்று மோசமாக விளையாடி வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி அடைந்து, 6 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமால்வெளியேறியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7 புள்ளிகள் (2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்)

2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. கொல்கத்தா அணிக்கு முதலில் கங்குலி கேப்டனாக பதவி வகித்த நிலையில், திடீரென அவரது கேப்டன் பதவியை பிரெண்டன் மெக்கலம் இடம் கொல்கத்தா அணி கிரிக்கெட் வாரியம் கொடுத்தது. இப்படியாக சர்ச்சை மற்றும் விமர்சனம் என கொல்கத்தா அணி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியது.

மெக்கல்லம், கங்குலி, அஜித் அகர்கர், முரளி கார்த்திக், கெயில், சஹா, இஷாந்த் ஷர்மா, டேவிட் ஹஸ்ஸி என அதிரடி வீரர்களை கொண்ட அணியாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதியில் வெறும் 7 புள்ளிகளுடன் தன்னுடைய லீக் சுற்றை முடித்து கொண்டது. 7 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்தில் முடித்து பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – 11 புள்ளிகள் ( 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் )

2008 ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் தற்பொழுது வரை எந்த ஒரு ஐபிஎல் தொடரையும் கைப்பற்றியது கிடையாது. சமீப சில வருடங்களில் அந்த அணி சற்று சுமாராக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனிலும் கடந்த சில வருடங்களில் அந்த அணி சற்று சுமாராக விளையாடி வந்தாலும், குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அந்த அணி மிக மிக சுமாராகவே விளையாடியது

மும்பை இந்தியன்ஸ் – 11 புள்ளிகள் (2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்)

ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து முறை தொடரை கைப்பற்றிய கோப்பையை வென்ற ஒரே அணியாக தற்போது வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப காலங்களில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது கிடையாது. குறிப்பாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இப்பொழுது விளையாடும் விதத்தில் அப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது இல்லை.

2009ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஷிகர் தவான், டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், ஜெயசூர்யா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ரஹானே, மெக்லாரன் என நட்சத்திர பட்டாளமே அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. சிறப்பான வீரர்களைக் கொண்டு களம் இறங்கினாலும் அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி 11 புள்ளிகள் மட்டுமே பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – 7 புள்ளிகள் ( 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் )

இதுவரை நடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஒரு முறை கூட இறுதிப்போட்டியில் வெல்லாத அணியாக பெங்களூர் அணி தற்போது விளங்கி வருகிறது. அந்த அணியில் எப்பொழுதும் நட்சத்திர வீரர்கள் நிறைய அடங்கி இருந்தாலும் ஒரு சில சீசன்களில் அந்த அணி மிகவும் மோசமாக விளையாடி அதிர்ச்சி அளிக்கும்.

2016ஆம் ஆண்டு மிக அற்புதமாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறி, கடைசி நேரத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் பறிகொடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு நிச்சயமாக பெங்களூரு அணி தோல்வியில் இருந்து மீண்டு இந்த முறை கோப்பையை கைப்பற்று என பெங்களூர் அணி ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

விராட் கோலி தலைமையில் ஷேன் வாட்சன், கெயில், ஏபி டிவில்லியர்ஸ், கேஎல் ராகுல், பவன் நெகி, சஹால், பத்ரி என நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியாக பெங்களூரு அணி களமிறங்கியது. இருப்பினும் அந்த அணி லீக் சுற்று முடிவில் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே எடுத்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஒட்டு மொத்த ஐபிஎல் தொடர்களில் அந்த அணி கைப்பற்றிய மிகக் குறைவான புள்ளிகள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 4 புள்ளிகள் ( 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் )

2008ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் என்கிற பெயரில் ஹைதராபாத் கிரிக்கெட் அணி விளையாடியது. 2008ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் ரோஹித் சர்மா, கிப்ஸ், ஆர் பி சிங், விவிஎஸ் லட்சுமணன், ஓஜா, சைமண்ட்ஸ், சமிந்த வாஸ் என அதிரடியான வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்கியது. நிச்சயமாக அதிரடி வீரர்களைக் கொண்ட இந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் போட்டிகளின் முடிவில் வெறும் இரண்டு போட்டிகள் மற்றும் வெற்றியடைந்து 4 புள்ளிகளுடன் இந்த அணி ஏமாற்றம் அளித்தது.

2008ஆம் ஆண்டு மிகவும் மோசமாக விளையாடிய இந்த அணி அதற்கு அடுத்த ஆண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக விளையாடியது என்றுதான் கூறவேண்டும். 2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அற்புதமாக விளையாடி அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றி கோப்பையையும் இந்த அணி வென்றது குறிப்பிடத்தக்கது.