முதல் முறையாக மும்பை அணியை விட்டு வேறு அணிக்கு சென்றுள்ள லசித் மலிங்கா – பயிற்சியாளராக நியமனம்

0
392

இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவிற்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சால் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். குறிப்பாக இவருடைய யார்க்கர் பந்துகள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். எதிரணி பேட்ஸ்மேன்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ட்ம்புகளை பதம் பார்ப்பார்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2009ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இவர் விளையாடி இருக்கிறார். 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை இதுவரை இவர் கைப்பற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளரும் இவர்தான்

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய வருடங்கள் ஆனாலும் 2013 2015 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவரது பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியை இவர் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

மலிங்காவை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுறுசுறுப்பாக மிக முக்கியமான வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஷிம்ரோன் ஹெட்மியர், நவ்தீப் சைனி, தேவ்தத் படிக்கல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நாதன் கவுல்டர் நைல் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை கைப்பற்றியது.

அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாக தலைவராக இலங்கையைச் சேர்ந்த லெஜெண்ட் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா இருக்கையில், தற்போது அந்த அணி மற்றொரு லெஜெண்ட் இலங்கை வீரரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது.

- Advertisement -

அந்த வீரர் வேறு யாருமல்ல முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான லசித் மலிங்கா தான். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பௌலிங் பயிற்சியாளராக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பௌலிங் ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலிங் பயிற்சியாளராக புதிய பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

கமெண்ட் அடித்து வரும் ரசிகர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்கு முன்பு மும்பை அணியில் விளையாடிய ஜோஸ் பட்டிலரை கைப்பற்றியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்ற பின்னர் அவர் மிக அற்புதமாக அந்த அணிக்கு விளையாடி வருகிறார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மும்பை அணியில் விளையாடிய மற்றொரு வீரரான போல்ட்டை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து முன்னால் மும்பை அணி வீரர் லசித் மலிங்காவையும் அந்த அணி கைப்பற்றியுள்ளதால், ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை அணி வீரர்களை குறிபார்த்து கைப்பற்றி வருகிறது என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்த மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.