“என் மகனுக்கும் பிடித்தவர் இவர்தான்” – கோலியா? பாபரா? கேள்விக்கு ஜெயசூர்யா பதில்!

0
681
Jayasurya

டி20 போட்டிகள் அறிமுகமாகாத காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் ஆசிய கண்டத்தில் இருந்து கிளம்பி உலகெங்கும் ஒருநாள் போட்டிகளில் டி20 போட்டி முறையில் விளையாடி பந்துவீச்சாளர்களை வதைத்துக் கொண்டிருந்தார். அவர்தான் இலங்கை அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியா!

இலங்கை அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை கைப்பற்றிய அர்ஜுன ரணதுங்கவின் கண்டுபிடிப்பு சனத் ஜெயசூர்யா. 96 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அர்ஜுன ரணதுங்க சனத் ஜெயசூரியாவை துவக்க ஆட்டக்காரராக கொண்டுவந்து, பீல்டர்கள் உள்வட்டத்தில் நிற்கும்போது தூக்கி அடித்து எதிரணியின் பந்துவீச்சை திட்டங்களை நொறுக்க சொன்னார். அவர் சொன்னதை விட இரு மடங்கு எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார் சனத் ஜெயசூர்யா.

- Advertisement -

இவர் இவரது காலத்தில் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்த சச்சினுக்கு நிகராக எதிரணி ரசிகர்களின் பயத்தை தூண்டியவர். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக இவர் ஆடிய சில ஆட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஒருநாளும் மறக்கவே மாட்டார்கள். இவரது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி அதிகபட்ச ஸ்கோர் இந்தியாவுடன்தான் அமைந்தது!

சமீபத்தில் இவருடன் நடைபெற்ற ஒரு உரையாடலில் மிக முக்கியமான கேள்விகள் நிறைய கேட்கப்பட்டது. அதற்கு ஜெயசூர்யா திறந்த மனதோடு தனது பதில்களை வெளிப்படையாக கூறி இருந்தார்.

அதில் அவரிடம் பிடித்தது பேட்டிங்கா பந்துவீச்சா என்று கேட்டபொழுது, பேட்டிங்கை தேர்வு செய்தார். அடுத்து பிடித்தது பயிற்சியாளர் பொறுப்பா கேப்டன் பொறுப்பா என்று கேட்டதற்கு கேப்டன் பொறுப்பை தேர்ந்தெடுத்தார். டெஸ்ட் போட்டியா இல்லை ஒருநாள் போட்டியா என்று கேட்டதற்கு ஒருநாள் போட்டியை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

அடுத்து அவரிடம் ஒரு மிக முக்கியமான கேள்வி வைக்கப்பட்டது. தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக இயங்கி வரும் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு நேரடியாக பதில் அளித்த சனத் ஜெயசூர்யா ” விராட் கோலியை எனக்கு பிடிக்கும். அவர் எனக்கு பிடித்த மிகப்பெரிய வீரர். என்னைப் போலவே என் மகனுக்கும் விராட் கோலியைத்தான் பிடிக்கும்” என்று அதற்கு பதிலளித்தார். தற்போது நடந்து வரும் முன்னாள் வீரர்கள் பங்குபெறும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூர்யா விளையாடுவார் என்று தெரிகிறது.