இளம் வீரர்கள் மீண்டும் ஏமாற்றம்.. ராகுல் செய்தது நியாயமா?

0
38

ஜிம்பாப்வேவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத ருத்துராஜ் கெய்க்வாட், ராகுல் திருபாதி ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கே.எல். ராகுல் இந்த முத்தான வாய்ப்பை வீணடித்து மீண்டும் ஷிகர் தவானை வைத்து பேட்டிங்கில் களமிறங்கினார். பந்துவீச்சில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்காத சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ஷாபாஷ் அகமதுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்திலும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் முதல் ஒரு மணி நேரத்திற்கு பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

இதை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல், ஷிகர் தவான் ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தது. தவான் 68 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் 46 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும் அடங்கும். தற்போது 23வது ஓவரின் இந்திய அணி 96 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் விளையாடி வருகிறது. களத்தில் சுப்மான் கில் மற்றும் இசான் கிஷன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று முக்கியத்துவம் இல்லாத ஆட்டத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது மிகவும் முக்கியம் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக கடின உழைப்பை மேற்கொண்டும், முக்கியத்துவம் இல்லாத போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களுடைய உத்வேகத்தை சீர்குலைத்து விடும். இப்படி வாய்ப்பு கொடுக்க வில்லை என்று முடிவு எடுத்து விட்டால் அவர்களை அணியில் சேர்ப்பது தவறு.

- Advertisement -

இதுபோன்ற சின்ன சின்ன தவறுகளால் இந்திய அணி பல இளைஞர்களை வீணடித்து விடுகிறது. ஒரு காலத்தில் சுதீப் தியாகி என்று வேகப்பந்துவீச்சாளர் இருந்தார். இஷாந்த் சர்மா போல் வருவார் என அனைவரும் அவரை எதிர்பார்த்தனர். ஆனால் அவரை இந்திய அணியில் சேர்த்து எப்போதும் பெஞ்சிலே அமர வைத்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.