சற்றுமுன்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாகிறார் கேஎல் ராகுல் – பிசிசிஐ அறிவிப்பு!

0
629

ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆசியக் கோப்பை தொடர் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்குகிறது இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக ஜிம்பாப்வே சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு, ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கே எல் ராகுல், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் இந்திய தேசிய அகடமியில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இவர் பங்கேற்பதாக இருந்தது. திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதால் இவரால் பங்கேற்க முடியாமல் போனது. ஆசிய கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் இவர் இடம் பெறுவாரா? என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில், கேஎல் ராகுல் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகையால் ஜிம்பாப்வே செல்லும் அணியில் இவர் சேர்க்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருக்கிறார். ருத்ராஜ் கெய்க்குவாட், ராகுல் திரிப்பாதி, தீபக் சகார் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது சமி போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய ஜிம்பாப்வே அணி இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. நல்ல பார்மில் இருக்கும் ஜிம்பாப்வே அணி, இந்திய அணிக்கு எதிராக நன்றாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் ஆட்டம் ஒருதலைபட்சமாக இருக்காது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளின் அட்டவணை:

முதல் போட்டி – ஆகஸ்ட் 18ம் தேதி

இரண்டாவது போட்டி – ஆகஸ்ட் 20ம் தேதி

மூன்றாவது போட்டி – ஆகஸ்ட் 22ம் தேதி

இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.