இந்திய கிரிக்கெட்

74 வருடம்.. 352 போட்டிகள்.. புது வரலாறு படைத்த கேரளா.. உதவிய ஹெல்மெட்.. முதல் முறையாக ரஞ்சி டிராபி பைனலுக்கு தகுதி

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் இதயமான ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கேரளா அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கேரளா அணி விக்கெட் கீப்பர் அசாரூதீனின் அபார சதம் காரணமாக 187 ஓவர்களில் 457 ரன்களை குவித்தது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய அசாரூதின் 341 பந்துகளில் ஒரு சிக்ஸ், 20 பவுண்டரிகள் உட்பட 177 ரன்களை விளாசினார். அதேபோல் சல்மான் நிசார் 202 பந்துகளில் 52 ரன்களையும், சச்சின் பேபி 195 பந்துகளில் 69 ரன்களையும் விளாசினர். குஜராத் அணி தரப்பில் நக்வஸ்வாலா 3 விக்கெட்டுகளையும், சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குஜராத் அணி அபார ஆட்டம்

இதன்பின் குஜராத் அணி தரப்பில் பஞ்சல் – ஆர்யா தேசாய் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த மனன் ஹிங்கிரிஜா 33 ரன்களிலும், உர்வில் படேல் 25 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் பஞ்சல் மட்டுமே தனியாக போராடி சதம் விளாசி அசத்தினார்.

ஒரு கட்டத்தில் குஜராத் அணியின் ஸ்கோர் 400 ரன்களுக்கு மேல் எட்டிய போது, எளிதாக முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஜெமீத் படேல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த சித்தார்த் தேசாய் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் குஜராத் அணியின் ஸ்கோர் 455 ரன்களை சேர்த்திருந்தது.

- Advertisement -

ஹெல்மெட் செய்த உதவி

2 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில், நகஸ்வலா அடித்த பந்து ஷார்ட் லெக்கில் நின்ற ஃபீல்டரின் ஹெல்மட்டில் அடித்து கேட்சானது. இதனால் குஜராத் அணி 455 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 2 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற கேரளா அணி இதன் மூலமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 5வது நாள் ஆட்டம் என்பதால், கேரளா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறது.

இதனால் கிட்டத்தட்ட கேரளா அணி ரஞ்சி டிராபி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது. 74 ஆண்டுகால ரஞ்சி டிராபி கிரிக்கெட் வரலாற்றில் கேரளா ரஞ்சி இறுதிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல்முறையாகும். தற்போதைய சூழலில் கேரளா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: முதல் மேட்ச் வெற்றி.. இனி இந்தியா செமி பைனல் தகுதி பெற என்ன நடக்க வேண்டும்.?. சூடுபிடிக்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025

மேலும் ரஞ்சி டிராபி தொடரை பொறுத்தவரை ஆட்டம் டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலை பெற்றுள்ளதோ, அந்த அணிக்கு புள்ளிகள் வழங்கப்படும். இதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை அடிப்படையில் கேரளா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -
Published by