நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இடையே விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் கோலி, டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு முன்பே ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து கபில் தேவ் பேசும்போது “விராட் கோலி மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இந்த முடிவை எண்ணி அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அவர் ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. கோலியிடம் சிறந்த பிட்னஸ் உள்ளது, மற்ற எந்த வீரரையும் விட அவரது பிட்னஸ் மிகச் சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது “பிட்னஸ் விஷயத்தில் 25 வயது கிரிக்கெட் வீரருக்குக் கூட அவரால் சவால் விட முடியும். கோபப்பட்டு ஓய்வு பெறுவது சரியானதல்ல. அவர்கள் மொஹிந்தர் அமர்நாத் போல இருக்க வேண்டும். அவர் பலமுறை டிராப் செய்யப்பட்டார், ஆனால் மீண்டும் அணிக்குத் திரும்பி மற்றவர்கள் தவறு என்பதை நிரூபித்தார்” என்று கூறி இருக்கிறார்.