கே.எல்.ராகுல் விராட் கோலி யார் துவக்க ஆட்டக்காரர்? – கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டமான பதில்!

0
540
Rohit sharma

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு கருத்துக்கள் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதில் மிகக் குறிப்பாக முகமது சமி மற்றும் சஞ்சு சாம்சன் ஏன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இல்லை என்று ரசிகர்கள் தரப்பு வரை கேள்விகள் காட்டமாக முன் வைக்கப்பட்டு இருந்தன. இதையெல்லாம் தாண்டி அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் பிரச்சனை குறித்து முன்னாள் வீரர்கள் அலசும் பொழுது, ஆடும் அணியில் விக்கெட் கீப்பர் யார்? ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்றால் அவருக்கு அணியில் எந்த இடம்? சூரிய குமாருக்கு எந்த இடம்? என்ற கேள்விகள் மிக முக்கியமாக முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி இன்னொரு கேள்வி மிக முக்கியமாக பலரது மத்தியில் வைக்கப்பட்டது. அது விராட் கோலியை தொடக்க வீரராக களம் இறக்குவது பற்றி. விராட் கோலி ஆசிய கோப்பையில் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உடன் துவக்க வீரராக களமிறங்கி 61 பந்துகளில் 122 ரன்களை அதிரடியாக குவித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு சதமடித்ததோடு தனது டி20 போட்டிகளில் முதல் சதத்தைப் பதிவு செய்திருந்தார். இதனால் விராட் கோலியைத் தொடக்க வீரராகக் களம் இறக்குவது பற்றி பேச்சுகள் அதிகம் எழுந்தன.

இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, இது குறித்து கருத்து கூறிய இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கௌதம் காம்பீர் ” இது ஒரு முட்டாள் தனமான பேச்சு. இதை இத்தோடு விட்டு விட வேண்டும். விராட் கோலி நம்பர் மூன்றில் தான் ஆட வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். மேலும் ரிஷப் பண்ட் இல்லை சூர்யகுமார் யாதவ் யாராவது மேலே போகலாம் என்ற கருத்தும் அவரிடமிருந்து வெளிப்பட்டது.

தற்போது இதற்கெல்லாம் சேர்த்து, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் யார்? மூன்றாவது மாற்று துவக்க ஆட்டக்காரர் யார்? என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளார். அதில் பலர் பேசிய கருத்துக்களுக்கு அழுத்தமான ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலியைத் துவக்க வீரராக களமிறங்குவது பற்றி பேசிய ரோஹித் சர்மா ” விராட் கோலி தான் எங்களின் மூன்றாவது துவக்க ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் துவக்க வீரராக ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடிய விதத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். உலகக்கோப்பையில் கேஎல் ராகுல் தான் எங்களின் முதல் துவக்க ஆட்டக்காரர். அவரது செயல் திறன் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது. அவர் அணிக்கு ஒரு மிக முக்கியமான வீரர். எங்களின் சிந்தனை செயல்பாட்டில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். கேஎல் ராகுல் ஒரு தரமான வீரர் அவர் எங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குகிறார். அவர் எங்களுக்கு முக்கியமானவர். அதேபோல் அவர் அணியில் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “உங்களுக்கு வீரர்கள் பல்வேறு இடத்தில் ஆடுவதற்கு திறமையோடு கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம். வீரர்கள் எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் ஆட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அப்படி வீரர்களை ஆட வைக்கும் பொழுது அது பிரச்சனை என்று நினைக்கக் கூடாது. அவர்களிடமிருந்து நல்ல முடிவுகளை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சி அது. நாங்கள் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் அணியில் எடுக்கவில்லை என்பதால், எங்கள் அணியின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி இருப்பார். அவர் சர்வதேச போட்டிகளில் சில ஆட்டங்களிலும் தனது ஐபிஎல் அணிக்கும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகச் சிறப்பாகவே விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்!