ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் திடீர் பதவி விலகல் – இடைக்கால பயிற்சியாளர் அறிவிப்பு

0
610
Justin Langer

ஆஸ்திரேலிய அணி தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை முடித்து விட்டு அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை ஆஷஸ் கோப்பையை தன்னகத்தே வைத்துக் கொண்டது ஆஸ்திரேலியா. அடுத்ததாக வரும் நாட்களில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

கூடவே கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த சிறப்பு வாய்ந்த பயணத்திற்கு முக்கிய காரணம் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு பயிற்சியாளராக பொறுப்பெடுத்துக் கொண்ட ஜஸ்டின் லாங்கர் இதுவரை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார்.

- Advertisement -

இவரது பயிற்சியில் ஒரே ஒரு மோசமான விஷயம் எதுவென்றால் இந்திய அணிக்கு எதிராக இரண்டு முறை சொந்த நாட்டிலேயே டெஸ்ட் தொடரை தோற்றது தான். அதுவும் கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து முன்னணி வீரர்களும் இருந்தபோதும் வலிமை குன்றிய இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது. அப்போதே லாங்கரின் பயிற்சியின் மீது பலருக்கு விமர்சனங்கள் எழுந்த போதும் ஆஷஸ் தொடரில் அவரை பயிற்சியாளராக தொடர்ந்தார்.

ஆனால் தற்போது லாங்கர் பதவி விலகியுள்ளார். அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்படும் என்று பலரும் கருத்துக்களை கூறி வந்த நிலையில் இன்று காலை தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் லாங்கர். அவருடைய இடத்திற்கு புதிய பயிற்சியாளரை ஆஸ்திரேலிய அணி தேடி வருகிறது. அதுவரை நடக்கவிருக்கும் தொடருக்கு தற்காலிக பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய நாடுகளில் இதுவரை பெரிதாக டெஸ்ட் தொடர்களில் சாதித்த ஆஸ்திரேலிய அணி புது பயிற்சியாளரின் கீழ் எப்படி விளையாடப் போகிறது என்பதைக் காண பல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -