ஐபிஎல் 2021: முதல் பாதியில் பங்கேற்காத சிஎஸ்கே வீரர் மீதமுள்ள போட்டிகளில் ஆடுவதை உறுதி செய்தார்

0
161
CSK in IPL 2021

மீதம் 31 போட்டிகள் ஆட வேண்டிய நிலையில் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று காரணமாக IPL தொடர் நின்று போனது. மீதமிருக்கும் ஆட்டங்கள் எல்லாம் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது நாட்கள் நெருங்கி வருகிறபடியால் ஐபிஎல் அணிகள் பயிற்சியை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்க இருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் நடக்கும் போது IPL தொடரிலிருந்து தன்னை விடுவித்திருந்தார் ஹேசல்வுட்.

அவருக்கு பதில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜேசன் பெஹரண்டாஃபை அந்த அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அவரின் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்ததும் சரியாக IPL தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஹேசல்வுட் பங்கேற்க தயாராக இருப்பதால் பெஹரண்டாஃப் மீதமுள்ள ஆட்டங்களில் ஆட முடியாது.

Josh Hazlewood csk

ஹேசல்வுட் இறுதியாக நடந்த வங்கதேச தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக பங்கேற்று இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு அது மோசமான தொடராக இருந்தாலும் ஹேசல்வுட் மிகச் சிறப்பாக பந்து வீசினார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் நான்கு ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒரு ஆட்டத்தில் கூட 24 ரன்களைக் கடந்து அவர் கொடுக்கவே இல்லை.

இப்படி சிறப்பான ஃபார்மில் இருக்கும் வீரர் ஒருவர் சென்னை அணிக்கு ஆடப்போவதை அறிந்த சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவலை சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை அணி வீரர்களான தோனி, ரெய்னா எல்லாம் துபாய்க்கு சென்று விட்டார்கள். மும்பை அணி வீரர்களில் சிலரும் துபாய் நகருக்கு சென்று விட்டார்கள். மீதமிருக்கும் அணிகளும் சீக்கிரம் சென்று பயிற்சிகளை துவங்க ஆயத்தமாயிருக்கிறார்கள். எட்டு அணிகளுடன் நடக்கும் கடைசி IPL தொடர் என்பதால் ரசிகர்கள் பலரும் இதைக் காண ஆர்வமாய் உள்ளனர்.