பாபர் அசாமைத் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரும் விராட் கோலிக்கு ஆதரவு !

0
162
Jos Buttler about Virat Kohli

விராட் கோலி! கிரிக்கெட் பக்கங்களை எத்தனை நூற்றாண்டுகள் கழித்துப் புரட்டினாலும், இந்தப் பெயர் பல சாதனைகளின் பத்து இடங்களுக்குள் பல முறை இடம் பெற்றிருக்கும். எந்தவித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல் கடந்த தசாப்த கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் என்ற கிரீடத்தை விராட்கோலிக்குச் சூட்டலாம். நிச்சயமாக அவர் கிரிக்கெட் உலகின் ராஜாவே!

இப்படிப்பட்ட மிகச்சிறந்த ஒரு பேட்ஸ்மேனின் பேட்டிங் செயல் திறனில் எப்படி பிரச்சினை ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு அவரிடம் இருந்து சதங்கள் வரவில்லை. 2020 காலக்கட்டங்கள் தாண்டி, விராட்கோலி எப்பொழுது சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்புகளின் குரல் ஒலித்தது. அந்தக் குரல்கள் மெல்ல மெல்ல மாறி, விராட் இந்த ஆட்டத்தில் நின்று விளையாட வேண்டும் என்று ஒலித்தது. இறுதியாக இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரின் போது அவர் ஒரு 30 ரன்களையாவது அடிக்க வேண்டுமென்றும், ரன் இல்லாமல் ஆட்டமிழந்து விடக்கூடாது என்றும் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தது. இந்த ஐ.பி.எல் தொடரில் மட்டுமே மூன்று முறை கோல்டன் டக் ஆயிருந்தார் விராட் கோலி!

- Advertisement -

விராட் கோலி ஓய்வு எடுத்துத் திரும்பினால் எல்லாம் சரியாகும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போன்றவர்கள் கூறியிருந்தார்கள். ஐ.பி.எல் முடிந்து தென்ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வும் அளிக்கப்பட்டது. விராட் கோலி மீண்டும் இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விராட் கோலியின் பேட்டிங்கில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. முதலில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இரண்டு டி20 போட்டிகளிலும் சேர்த்து 12 ரன்களும், நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார்.

விராட் கோலியிடம் இருந்து ரன்கள் வரும் வராமல் போட்டிகள் தாண்ட தாண்ட விமர்சனங்கள் என்பதைத் தாண்டி, நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் நம்பிக்கை இழக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் விராட் கோலியின் மீது விமர்சனங்களை வைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரிக்க செய்ய, இன்னொரு புறத்தில் இருந்து அவருக்கான ஆதரவு குரல்களும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. உண்மையில் விராட் கோலியின் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாகிஸ்தானின் ஆசிப்பை தவிர வேறு யாரும் நம்பிக்கையற்று கூறவில்லை. கபில்தேவ் விராட்கோலியை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம் அதில் எந்தத் தவறும் இல்லையென்றே கூறியிருந்தார். இதனால் விராட் கோலிக்கு கவாஸ்கர், ரோகித் சர்மா, கிரேம் ஸ்வான் போன்ற பல முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்று, விராட்கோலியோடு ஒப்பிடப்படும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம், இதுவும் கடந்து போகும் வலிமையாக இருங்கள் விராட் கோலி என்று கூறியிருந்தார். இன்று இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த வீரர். விராட் மீதான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர் இந்தியாவுக்காக நிறைய வென்று கொடுத்துள்ளார்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -