30 பந்தில் அதிரடி அரை சதம் விளாசி பேரிஸ்டோ புதிய சாதனை ; நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து

0
165
Jonny Bairstow England test team

இங்கிலாந்திற்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் செய்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டிலும், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்தது!

இந்தத் தொடரின் கடைசி மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் வழக்கம்போல் டாம் ப்ளூன்டலின் அரைசதம், டேரி மிட்ச்செல்லின் சதத்தோடு 329 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, ஜானி பேர்ஸ்டோவும், அறிமுக வீரர் ஜேமி ஓவர்டனும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை முன்னிலை பெற வைத்தனர். ஜேமி ஓவர்டன் 97 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 162 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 360 ரன்களை சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி டாம் லாதம், டேரி மிட்ச்செல், டாம் ப்ளூன்டலின் அரைசதங்களால் 326 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காம் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 113 ரன்கள் தேவை. ஒலி போப் 81 ரன்களோடும், ஜோ ரூட் 55 ரன்களோடும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு ஒரு ரன் சேர்த்த நிலையில் ஒலி போப் 82 ரன்களில் செளதி பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதற்கடுத்து களம்கண்ட ஜானி பேர்ஸ்டோ, இந்தத் தொடரில் வெளிப்படுத்தும் அதிரடியைக் கைவிடாமல், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். வெறும் 30 பந்துகளைச் சந்தித்த அவர் அரைசதமடித்தார். இதன் மூலம் டெஸ்டில் அதிவேக அரைசதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முடிவில் 54.2 ஓவரில் 296 ரன் இலக்கை அனாசயமாக விரட்டி இங்கிலாந்து அணி பெற்று, இந்த டெஸ்ட் தொடரில் 3-0 என நியூசிலாந்து அணியை வொய்ட்வாஷ் செய்திருக்கிறது. ஜோ ரூட் 86 ரன்களோடும், ஜானி பேர்ஸ்டோ 44 பந்துகளில் 71 ரன்களோடும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்!

இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிவேக அரைசதமடித்த ஆறு வீரர்கள்

28 பந்து – இயான் போத்தம் – டெல்லி – இந்தியா – 1981

30 பந்து – ஜானி பேர்ஸ்டோ – ஹெட்டிங்லி – நியூசிலாந்து – 2022

32 பந்து – இயான் போத்தம் – தி ஓவல் – நியூசிலாந்து – 1986

33 பந்து – ஆலன் லாம்ப் – ஆக்லாந்து – நியூசிலாந்து – 1992

33 பந்து – ஆன்ட்ரூ ப்ளின்டாப் – வெலிங்டன் – நியூசிலாந்து – 2002

33 பந்து – ஸ்டூவர்ட் பிராட் – மான்செஸ்டர் – வெஸ்ட் இன்டீஸ் – 2020