பல மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ஜோப்ரா ஆர்சருக்கு மீண்டும் ஒரு பெரிய சிக்கல்

0
842
Jofra Archer

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். நல்ல வேகத்தில் அதேசமயம் மிகத் துல்லியமாக பந்து வீசுவதில் சாமர்த்தியசாலி. இந்த வருட துவக்கத்தில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் என மார்ச் மாதம் வரையில் கடைசியாக சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார்.

பின்னர் இவருக்கு வலது முழங்கையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் தற்போது வரை எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் விளையாடாமல் இருக்கிறார். இதற்காகவே அவர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீடிக்கும் அவரது வலது முழங்கை பிரச்சனை

வருகிற ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை விளையாடப் போகிறது. மீண்டும் பழைய உடல் தகுதியுடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது அவரது வலது முழங்கையில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மேலும் ஓய்வு தேவை. இதன் அடிப்படையில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க போவதில்லை என்கிற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க போவதில்லை

அதுமட்டுமின்றி அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட போவதில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. காயம் பூரணமாக குணமடைந்து மீண்டும் பழைய உடல் தகுதியுடன் அவர் விளையாட இன்னும் ஆறு மாத காலம் தேவைப்படும். எனவே இன்னும் 6 மாத காலத்திற்கு அவர் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாட போவதில்லை.

ஒரு வருடத்திற்கு மேலாக அவர் இவ்வாறு கிரிக்கெட் போட்டியில் விளையாடமல் இருப்பது அவரது ரசிகர்கள் அனைவரையும் தற்பொழுது சோகமடைய செய்துள்ளது.