ஜூலன் கோஸ்வாமி கடைசி போட்டி ; இந்திய கேப்டன் கண்ணீர் ; வீடியோ இணைப்பு!

0
187
Jhulan

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையில் சச்சின் என்றால் அது சமீபத்தில் ஓய்வு பெற்ற மிதாலிராஜ். அதேபோல் பந்துவீச்சு துறையின் சச்சின் என்றால் தற்போது தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜூலன் கோஸ்வாமி!

சகதா எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜூலன் கோஸ்வாமிக்கு தற்போது வயது 39. இவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்த வயதிலும் அவர் மிகச் சிறப்பாக பங்காற்றி வந்தது மிகப்பெரிய விஷயம். பெண்கள் கிரிக்கெட்டில் பொதுவாக வேகப்பந்து வீச்சு துறைதான் சிரமமானது. அந்த சிரமத்தைப் போக்குவதற்காக இந்திய அணியில் இந்த வயது வரை அவர் தொடர்ந்து இருந்து வந்தார்.

2002 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முதலில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு அதே மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி டி20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி உடனே அறிமுகமானார். தற்போது அவர் ஓய்வும் இங்கிலாந்து அணி உடனேயே நடக்கிறது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 203 ஆட்டங்களில் 253 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சிறந்த பந்துவீச்சு 6/31. 12 டெஸ்ட் போட்டிகளில் 21 இன்னிங்சில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் நான்கு விக்கெட்டுகளை இரு முறையும், 5 விக்கெட்டுகளை இரு முறையும், ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை ஒருமுறையும் எழுதி இருக்கிறார். 68 டி20 போட்டிகளில் ஐம்பத்தி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் இவரது சிறந்த பந்துவீச்சு 5/11. மேலும் டெஸ்ட் போட்டியில் இரண்டு அரை சதம் ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் என பேட்டிங்கிலும் பங்களிப்பு தந்திருக்கிறார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு இரண்டு என இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முதல் இரண்டு போட்டியில் வென்று கைப்பற்றி இருந்தது. தற்போது 3வது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி ஜூலன் கோஸ்வாமிக்கு சர்வதேச இறுதிப்போட்டி ஆகும். அவர் இத்தோடு ஓய்வு பெறுகிறார்!