காயத்தால் விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார்?! – புதிய தகவல்கள்!

0
860
Bumrah

ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இதற்கடுத்து முக்கிய முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 22-ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது!

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். மேலும் ரிசர்வு வீரர்களில் முகமது சமி, தீபக் சஹர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.

இதற்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக நடக்கும் டி20 இந்திய அணியில் இடம் பெற்றார்கள். மேலும் உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பெற்றார்கள்

இந்த நிலையில், ஆஸ்திரேலியா டி20 தொடரில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா, தென்னாபிரிக்க அணியுடனான டி20 தொடரின் முதல் போட்டியிலும் விளையாடவில்லை. காயத்தின் பாதிப்பு சிறிது இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

ஆனால் இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக ஜஸ்பிரித் பும்ராவின் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் சரியாகாத காரணத்தால் அவர் டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக டி20 உலக கோப்பையில் யார் இடம்பெறுவார்கள் என்று தெரியவில்லை.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் எஞ்சியிருக்கும் 2 டி20 போட்டிகளுக்கு ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம் பெறுவார் என்று தெரிகிறது. அக்டோபர் 9ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை அணியில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம் என்பதால், தென் ஆப்பிரிக்க தொடர் முடிவடையும் நேரத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கான டி20 உலகக் கோப்பை மாற்று வீரர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது!