5வது முக்கிய டெஸ்ட்டில் புதிய கேப்டன் : தோனியின் வார்த்தைகளை நினைவு கூறியுள்ள கேப்டன் பும்ரா

0
158
MS Dhoni and Jasprit Bumrah

இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்தின் எழுச்சி ஜஸ்ப்ரீட் பும்ராவின் வருகைக்குப் பின்னால்தான் உருவானது என்று தாராளமாகச் சொல்லலாம். குஜராத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீட் பும்ராவை அடையாளம் கண்டு ஐ.பி.எல் தொடரில் உள்ளே கொண்டுவந்தது மும்பை இன்டியன்ஸ் அணிதான். அங்குதான் அவரது பந்துவீச்சு திறன் மேலும் பட்டை தீட்டப்பட்டது என்றால் மிகையில்லை!

ஐ.பி.எல் தொடரில் இவரது வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளை மிரள வைத்தார். இதனால் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அதே ஆண்டு அதே மாதம் அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே சர்வதேச டி20 போட்டியிலும் அறிமுகம்.

- Advertisement -

இப்படி இரு ஆண்டுகள் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய பும்ராவை, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் கொண்டுவந்தது அப்போதை தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிதான். அவர் இவரது பந்துவீச்சின் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

இதனால் இந்தியாவிற்காக 2018ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 6ஆம் தேதி பும்ரா தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனால். கிரிக்கெட்டில் எஸ்.இ.என்.ஏ எனப்படும் செளத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நியூசிலாந்து தவிர மற்ற மூன்று நாடுகளிலும், வெஸ்ட் இன்டீசிலும் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த ஒரே இந்திய பவுலர் என்ற அளவில் சிறப்பாகச் செயல்பட்டு உயர்ந்திருக்கிறார். இதுவரை 29 டெஸ்டுகளில் 123 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.

தற்பொழுது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு முன்பாகவே கே.எல்.ராகுல் காயமடைந்ததால் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு, ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சென்றது. தற்போது கோவிட் தொற்றால் கேப்டன் ரோகித் பாதிக்கப்பட, பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கடைசியாக இந்திய டெஸ்ட் அணியை ஒரு வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் வழிநடத்தியது 1987ஆம் ஆண்டுதான். தற்போது இப்பொழுது பும்ராவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது!

- Advertisement -

தற்போது தனக்கு கேப்டன் பொறுப்பு தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசியுள்ள பும்ரா, அதில் “எம்.எஸ்.தோனியுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் என்னிடம் அப்போது பேசும்போது இந்திய அணியை வழிநடத்துவதற்கு முன்பு, எந்தவொரு அணியையும் வழிநடத்தியது இல்லையென்று கூறியிருந்தார். தற்போது அவர் எல்லாக் காலத்திலும் வெற்றிக்கரமான கேப்டனாக நினைவுக் கூரப்படுகிறார். இதனால் நான் இப்பொழுது என் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன். இதற்கு முன்பு நான் என்ன செய்தேன்? கிரிக்கெட் விதிகள் அல்லது மரபுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன? என்று நான் சிந்திக்கவில்லை. வியாழக்கிழமை மீண்டும் ஒருமுறை ரோகித்தைப் பரிசோதித்து அதில் கோவிட் பாசிடிவ் என்று வந்த பிறகுதான் அணியை நான் வழிநடத்துவேன் என்று தெரிந்துகொண்டேன். அடுத்து முதலில் இதை என் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்” என்று கூறினார்!