குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜேசன் ராய் – 12 மாதம் தடை & அபராதம் விதித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்

0
392
ECB Suspended Jason Roy

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் கூட தோற்று லீக் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணி, அடுத்து உள்நாட்டில் 2019-ல் நடைபெற்ற உலகக்கோப்பையில் சாம்பியனாகிறது.

2019 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியைக் கட்டமைக்கும் போது, பேட்டிங்கில் முன் ஊடறுப்பு தாக்குதல் வீரராக சிறப்பாகச் செயல்பட்டு, இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல முக்கியமானதொரு காரணமாக இருந்தவர் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய்.

இவர் இந்த ஆண்டு பாகிஸ்தானின் உள்நாட்டு டி20 தொடரில் பங்கேற்று, ஒரு சதம் விளாசியிருந்தார். இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டும் இருந்தார்.

இடையில் திடீரென ஐபிஎலின் நீண்ட கடுமையான பயோ பபுளில் இருப்பது கடினமென்றும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் கூறியதோடு, கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஆனால் குறுகியதொரு இடைவெளியை எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் நெருக்கமான அங்கமான, இங்கிலாந்து, வேல்ஸ் உள்நாட்டு கிரிக்கெட் ஒழுங்கு விதிமீறல்களை விசாரிக்கும் குழுவான, கிரிக்கெட் டிசிப்ளின் கமிசன் ஜேசன் ராய்க்கு 2,500 பவுண்ட்கள் அபராதம் விதித்ததோடு, அடுத்த இங்கிலாந்தின் இரு போட்டிகளில் விளையாட தடையும் விதித்திருக்கிறது. இந்த அபராதம் வரும் 31ம் தேதிக்குள் கட்டப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜேசன் ராய் கிரிக்கெட் நலன்களுக்கு பாதகமாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கும், அவருக்குமே அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்துகொண்டதால், இந்த தண்டனையும், அபராதமும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் நன்னடத்தையின் காரணமாக, இரு போட்டிகளுக்கான தடையை, அடுத்த 12 மாதத்திற்கு இடைநிறுத்தி வைப்பதாவும் அறிவிக்கப்படுள்ளது.

ஆனால் இதுபோன்ற விசயங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் வழக்கமான வெளிப்படையான நடைமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை. ஜேசன்ராய் மீதான குற்றம் என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை!

பாகிஸ்தானின் பிஎஸ்எல் பங்கேற்கிறார், இந்தியாவின் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பெயர் கொடுக்கிறார், குஜராத் அணியால் வாங்கப்பட்டும், பயோ பபுளை காரணம் காட்டி விலகுகிறார். தற்போது அவர் மீதான குற்றம் என்ன என்பதைச் சொல்லாமலே குற்றவாளியென்று ஒரு தீர்ப்பும், அதில் தண்டனையும் குறிப்பிடப்படுகிறது, அதிலேயே அபராதம் மட்டும் உறுதிசெய்யப்பட்டு, இரு போட்டிகளுக்கான தடை 12 மாதங்களுக்கு, அவர் நன்னடத்தையால் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது!

ஏதோ நடந்திருக்கிறது, ஏதோ நடக்கவும் செய்கிறது, ஆனால் மறைக்கப்படுகிறது போல. 2019 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியும், அலெக்ஸ் ஹேலசும் நினைவுக்கு வருகிறார்!