சி.எஸ்.கே அணியுடன் பிரச்சனை ? சென்னை அணி தொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கிய ஜடேஜா !

0
137
Ravindra Jadeja CSK

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் மெகா ஏலத்தோடு நடைபெற்றது. ஐ.பி.எல் தொடரின் வெற்றிக்கரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற விதியின் கீழ் ரவீந்திர ஜடேஜா 16 கோடி, மகேந்திர சிங் தோனி 12 கோடி, மொயீன் அலி 8 கோடி, ருதுராஜ் 6 கோடி என்று தக்கவைத்துக்கொண்டது. மேலும் பழைய வீரர்களில் அம்பதி ராயுடு, பிராவோ, தீபக் சஹர், உத்தப்பா ஆகியோரை ஏலத்தில் இருந்து கொண்டுவந்தது!

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐ.பி,எல் தொடரின் முதல் ஆட்டமாக, கொல்கத்தா அணியோடு சென்னை மோத ஒருநாள் இருக்கும் போது கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி தன்னை விடுவித்துக் கொண்டார். ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்தது. புதிதாகப் பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா தன் அருகிலேயே தோனி இருப்பதால் தான் எது குறித்தும் கவலைப்படப் போவதில்லை என்றும், சென்னை அணியை வெற்றிக்கரமாக வழிநடத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

தொடரின் முதல் இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து தோற்றதில்லை என்கின்ற ஐ.பி.எல் சாதனையோடு இந்த ஆண்டு தொடருக்குள் ஜடேஜா தலைமையில் வந்த சென்னை அணி தொடர்ந்து தோற்று, தன் ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையைப் பதிவு செய்தது. 15 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பவர்-ப்ளே ஸ்விங் பாஸ்ட் பவுலர் தீபக் சாஹரும், மணிக்கு 140 கி.மீ மேல் வீசக் கூடிய ஆடம் மில்னேவும் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை அணியைக் கடுமையாகப் பாதித்தது.

இந்த நிலையில் தொடரின் 70% ஆட்டங்களைச் சென்னை அணி விளையாடி முடித்திருக்க, கையில் காயம்பட்டதாய் கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை. மேலும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதோடு, அணியில் இருந்தும் வெளியேறினார். மேலும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்தொடர்வதையும் நிறுத்தினார். மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்து சென்னை அணி நிர்வாகம் கேப்டன் ஜடேஜாவிடம் சரிவர நடந்து கொள்ளாது, அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வற்புறுத்தியதாகவும், இதனாலயே ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியதோடு அணியிலிருந்தும் வெளியேறினார் என்று இரசிகர்கள் சந்தேகம் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனை அடுத்து சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் இதை மறுத்து, ஜடேஜா சென்னை அணியில் தொடர்கிறார் என்று பேசி இருந்தார்.

- Advertisement -

தற்போது கழுகுக்கண் கொண்ட இரசிகர்கள் சிலர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பாக 2021, 2022ஆம் ஆண்டு பதிவேற்றிய பதிவுகளை மொத்தமாக நீக்கியுள்ளதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கு ரவீந்திர ஜடேஜாவை துணை கேப்டனாக அறிவித்து இருந்ததிற்குச் சென்னை ஆணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது!