” அவருக்கு இது முடிவல்ல இது ஆரம்பம்தான்” – சஞ்சய் பாங்கர் அதிரடி கருத்து!

0
69
Sanjay Bangar

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி 3 வார ஓய்வுக்குப் பிறகு ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்குள் திரும்ப வந்திருக்கிறார். தற்பொழுது தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அவரது காணொளிகள் சமூகவலைதளத்தில் கசிந்து இருக்கின்றன!

விராட் கோலியின் பேட்டிங் பார்ம் கடந்த 3 ஆண்டுகளாக சரிந்தே வந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் சர்வதேச போட்டியில் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு அவரது பேட்டில் இருந்து சதம் வரவில்லை. இந்த நிலை ஆயிரம் நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஆரம்பத்தில் அவரிடம் சதம் வராதது மட்டுமே பேசுபொருளாக இருந்தது. ஆனால் அதற்கடுத்து அவரது பேட்டில் இருந்து அரை சதங்களும் வருவது நின்றது. இது இன்னும் மோசமடைந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் பந்திலேயே மூன்று முறை ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மேலும் இந்தத் தொடரில் ஒரே ஒரு முறைதான் 50 ரன்களை கடந்து இருந்தார்.

விராட் கோலி ரன்களை அடிக்காததைவிட அவர் ஆட்டம் இழக்கும் முறைதான் அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக அவர் விளையாடிய எளிமையான பந்துகளில் எல்லாம் அவர் ஆட்டமிழந்தார். இந்திய பேட்டிங் அனுபவமில்லாத ஒரு இளம் வீரரை போல அவர் சாதாரண பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டின் செயல்பாடுகளையும் சிதைத்தது. காரணம் இந்திய பேட்டிங் யூனிட்டில் அவரது பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தது. அவர் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதும் மொத்த அணியும் அப்படியே வீழ்ந்தது.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடருக்கு பிறகு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 20 ரன்கள் தான். இந்த நிலையில் அவருக்கு ஒரு நீண்ட ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வெஸ்ட்இண்டீஸ் உடனான தொடரில் இருந்து முழு ஓய்வு தந்து மூன்று வாரங்கள் கிரிக்கெட்டில் இருந்து வெளியே வைத்தது. தற்போது இந்த ஓய்வுக்குப் பிறகு விராட்கோலி திரும்ப வந்திருக்கிறார்.

விராட் கோலி குறிப்பு இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருபவருமான சஞ்சய் பாங்கர் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது ” அவர் மீண்டும் புதிதாக தொடங்குவார். அவருக்கு ஆட்டத்திற்கு சில மோசமான நிலைகள் இருந்தது. அவர் அதற்காக ஒரு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டார். இதை ஒரு இடைவேளை என கருத முடியாது. மேலும் அவர் இதைப்பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. அவர் எப்படி விளையாட வேண்டும் என்கிற தெளிவு அவரிடம் சிறப்பாக உள்ளது. கோலி ஏற்கனவே மிகச் சிறப்பாக விளையாடிய வீரர்தானே? அவர் உலகம் பார்க்க விரும்பும் ஒரு விளையாட்டு வீரர் மற்றும் ஒரு மனிதர். இதைவிட முக்கியமானது அவர் தனக்குள் தன்னை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதுதான். இந்த விஷயத்தில் விராட் கோலி மிகத் தெளிவாக இருக்கிறார்” என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பையில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி துபாய் மைதானத்தில் முதல் போட்டி நடக்க இருக்கிறது. தொடரில் இரு அணிகளிலும் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஷாகின் ஷா அப்ரிடி இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!