இது 117 ரன் எடுக்கிற விக்கட்டே கிடையாது- கேப்டன் ரோஹித் சர்மா வேதனை

0
285
Rohitsharma

இந்திய அணி இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தனது குடும்ப நிகழ்வில் பங்கேற்ற காரணத்தால் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பையில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மைதானத்தில் நடந்தது இந்த போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பி வந்து டாசை இழந்தார். ஆஸ்திரேலியா கேப்டன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 26 ஓவர்களில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களிடம் குறிப்பாக மிட்சல் ஸ்டார்க்கிடம் ஐந்து விக்கட்டுகளை பறிகொடுத்து 117 ரன்களுக்கு அடங்கியது.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்த பொழுது பந்துவீச்சில் அவர்களுக்கு எந்த பிரச்சனையையும் இந்திய பந்துவீச்சாளர்களால் கொடுக்க முடியவில்லை. பதினோரு ஓவர்களில் ஆஸ்திரேலியா துவக்க ஜோடி இருவரும் அரை சதங்களைக் கடந்து அணியையும் வெல்ல வைத்தனர். பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
“ஆட்டத்தில் தோற்பது எப்பொழுதும் ஏமாற்றத்தை தருவதுதான். நாங்கள் எங்களது பேட்டிங்கை சரியாக செய்யவில்லை. ஸ்கோர் போர்டில் சரியான ரண்களை போடவில்லை. இந்த விக்கெட் நிச்சயம் 117 ரன்களுக்கான விக்கெட் இல்லை. விக்கட்டுகளை இழந்து கொண்டே இருந்ததால் அது நாங்கள் விரும்பிய ரன்னை எடுக்க அனுமதிக்கவில்லை. முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை இழந்தாலும் அடுத்து நானும் விராட் கோலியும் 30, 35 ரங்களை விரைவாக கொண்டு வந்தோம். அடுத்து நாங்கள் விரைவாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். அது எங்களை பின்னுக்குத் தள்ளியது. அதிலிருந்து மீண்டு வருவது எப்பொழுதும் கடினமானது!” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “இன்று எங்களுடைய நாள் அல்ல. ஸ்டார்க் ஒரு தரமான பந்துவீச்சாளர். புதிய பந்தில் ஆஸ்திரேலியாவுக்காக அவர் அதை செய்து வருகிறார். அவர் தனது வலிமைக்கு ஏற்ற விதத்தில் பந்து வீசினார். புதிய பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். பேட்ஸ்மேன்களை யூகத்தில் வைத்தார். பவர் ஹிட்டிங் என்று வரும் பொழுது மார்ஷ் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும். பவர் ஹிட்டிங்கில் கண்டிப்பாக அவர் உலகின் மூன்று நான்கு பேட்ஸ்மேன்களுக்குள் வருவார்!” என்று கூறியிருக்கிறார்!