“இவரை உலககோப்பைக்கு கூட்டிட்டு போறது கவலையான விஷயம்” – வாசிம் ஜாபர் கவலை!

0
329
Wasim Jaffer

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காயத்தால் பங்கேற்க முடியாமல் போன இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்சல் படேல் அணிக்கு திரும்ப வந்திருப்பது நல்ல விஷயம்.

ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயத்தால் வெளியேறிய ரவிந்திர ஜடேஜாவின் இடத்துக்கு அக்சர் படேல் வந்திருக்கிறார். அவரது செயல்பாடு பேட்டிங்கில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பந்துவீச்சில் மிக நன்றாகவே இருப்பது நல்ல விஷயம்.

இன்னொரு புறத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாகல் உடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பது பெரிய பலமாக இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஒரு பந்துவீச்சு துறையை எடுத்து இந்திய அணியை பார்க்கும்பொழுது பெரிய அளவில் பலவீனங்கள் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் யுஸ்வேந்திர சகலின் பந்து வீச்சை எடுத்து பார்க்கும் பொழுது அது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகவே இருக்கிறது. ஆசியக் கோப்பையில் அவர் முதல் சுற்று போட்டிகளில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. சூப்பர் 4 சுற்றில் 1/43, 3/34 என்று ஓரளவுக்கு இருந்தது.

சாகல் தொடர்ந்து விளையாடுவது அவருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றும், ஒரு ஓய்வு தந்த பின் அவர் மீண்டும் வந்து விளையாடும் பொழுது மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் இந்திய அணியின் மூத்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருந்தார்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இன்னும் ஒருபடி மேலே போய் உலகக் கோப்பை இந்திய அணியில் சாகலுக்கு இடம் வேண்டுமா? என்கிற அளவில் யோசித்திருக்கிறார். அவர் இந்திய உலகக் கோப்பை அணியில் சாகல் இருப்பது ஒரு கவலைக்குரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறார்.

இதுதொடர்பாக வாசிம் ஜாபர் கூறுகையில் ” பந்துவீச்சில் நிலைமைகள் அவருக்கு எதிராக இருக்கும் பொழுது, அவரிடம் வீசுவதற்கு நிறைய வகைகள் இல்லை என்று நான் பார்த்திருக்கிறேன். சாகலை என்னுடைய முக்கிய சுழற்பந்து வீச்சாளராக எடுத்துக்கொண்டு உலகக்கோப்பைக்கு செல்வதை நான் கவலைக்குரியதாக கருதுவேன். நான் ரவி பிஷ்னோயை பார்ப்பேன். அவர் பந்து வீச்சில் வித்தியாசத்தை தருகிறார்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய வாசிம் ஜாபர்
” ரவி பிஷ்னோய் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் கூட சில கடினமான ஓவர்களை வீசினார். அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அஸ்வின் மற்றும் சாகலிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நான் ரவி, குல்தீப்பை அணியில் வைப்பதில் ஆர்வமாக இருப்பேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.