“வெளியே உட்கார்ந்து பேசுறது ஈசி.. மனசு வலிக்குது ஸார்” – அஸ்வின் கபில்தேவுக்கு மறைமுக பதிலடி!

0
1673
Ashwin

இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக லெஜெண்ட் ஆல் ரவுண்டர் கபில்தேவ் இருக்கிறார். எந்த ஒரு போட்டியையும் காயத்தால் இழக்காத அபூர்வ வீரர் என்ற பெயரோடு அணிக்கான சேவையில் அர்ப்பணிப்பானவர் என்கின்ற அடையாளத்தோடு கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் மதிப்போடு பார்க்கப்படக்கூடியவர்!

இவர் சமீபத்தில் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகம் குறித்து பேசி இருந்த கருத்துகள் சில சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகின. காரணம் இவர் எந்தவித ஒளிவு மறைவையும் பேச்சில் பின்பற்றாமல் தனக்கு தோன்றிய விதத்தில் அப்படியே பேசி இருந்தார்.

- Advertisement -

இந்திய வீரர்களுக்கு பணம் நிறைய கிடைக்கிறது, அதனால் அவர்களுக்கு ஆணவம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை, அவர்கள் கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்களிடம் ஆலோசனைகளை பெற்று, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாக கடுமையாக பேசியிருந்தார்.

இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா பேசும் பொழுது ” கபில்தேவ் அப்படி சொன்னாரா என்று எனக்கு தெரியாது. நான் சமூக வலைதளங்களில் இப்படியான செய்திகளை தேடுவது கிடையாது. ஆனால் அவர் சொல்வது போல நாங்கள் கிடையாது. நாங்கள் கடினமாக உழைக்கிறோம். மிகச் சரியான முறையில் பண்போடு இருக்கிறோம்” என்பதாகக் கூறியிருந்தார்.

உலகக்கோப்பை நெருங்கும் இந்த வேளையில் இது சம்பந்தமாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது
“வெளியில் உட்கார்ந்து கொண்டு சில கருத்துக்களை சொல்வது மிகவும் சுலபம். சில கருத்துக்களை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் வலிக்கிறது. வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எனவே இப்படி கடினமாக உழைக்கும் நம் கிரிக்கெட் நாம் பாசிட்டிவிட்டியை பரப்பலாம். நமது அணி வென்றாலும் வெல்லாவிட்டாலும் நாம் அவர்களை ஆதரிப்போம் என்று அவர்களுக்கு நம்பிக்கை தந்து ஊக்குவிக்கலாம்.

- Advertisement -

குறிப்பிட்ட நாள் போட்டியில் நாம் நன்றாக இருக்க நமக்கு என்ன தேவை? நமக்கு நிறைய பாசிட்டிவிட்டிதான் தேவை. நம்முடைய மக்கள் வெற்றி தோல்வி தாண்டி நம்மை ஆதரிப்பார்கள் என்று வீரர்கள் பாசிட்டிவாக உணர வேண்டும். இந்தியா போன்று கடினமாக உழைக்கும் ஒரு அணியை வீரர்களை நாம் வெளியில் பார்க்க முடியாது. வீரர்கள் பயிற்சி அமர்வுகள் மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வளவு உழைக்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.

நாம் 2007, 2011 ஆம் ஆண்டு இரண்டு உலகக் கோப்பைகளை வென்றோம். 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். மக்கள் தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளாக நாம் எந்த கோப்பையை வெல்லவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் நாடாக நாம் இவ்வளவு தூரம் முன்னேறி வந்ததற்கு நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டும். நமது வீரர்களுக்கு நாம் பாசிட்டிவை கொடுக்க வேண்டும்!” என்று கபில்தேவ் பேச்சுக்கு மறைமுகமான தனது பதிலடியை முன் வைத்திருக்கிறார்!