உலகக் கோப்பையை வென்று 11 வருடங்கள் ஆகிவிட்டது உண்மைதான் ஆனால்?… ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
479
T20iwc2022

இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகிறது. ஐசிசி நடத்தும் தொடரை வென்று ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதற்குப் பிறகு பல நாடுகள் பங்கு கொள்ளும் ஐசிசி தொடரில் இந்திய அணி பட்டத்தை வெல்லவில்லை!

தற்போது ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள சூழல்களுக்குப் பழகி தயாராகி இருக்கிறது.

- Advertisement -

2007ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த இந்திய அணியில் இடம்பெற்ற இரண்டே இரண்டு வீரர்கள் மட்டும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மா இருவர்தான் தற்போது நடக்க இருக்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பொழுது, உடற்தகுதி மற்றும் பார்ம் காரணமாக ரோகித் சர்மா அந்த இந்திய அணியில் இடம்பெறவில்லை. தற்பொழுது கேப்டனாக ரோகித் சர்மா முதன் முதலில் ஒரு உலகக் கோப்பை தொடரை சந்திக்க இருக்கிறார்.

இதுகுறித்து ரோகித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது
” நாம் உலகக்கோப்பையை வென்று பதினொரு வருடங்கள் ஆகிவிட்டது உண்மைதான். தற்பொழுது வெல்வதற்குதான் தயாராகி வந்திருக்கிறோம். ஆனால் உலகக் கோப்பையை வெல்லும் இடத்திற்குச் செல்வதற்கு பல விஷயங்களை சரியாகச் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் அதிக தூரம் முன்னோக்கி அரையிறுதி இறுதிப் போட்டி என்று யோசிக்க முடியாது. எங்கள் முன்னால் இருக்கும் ஆட்டம் குறித்துதான் யோசிக்க முடியும். ஒவ்வொரு முறையும் மீண்டு வருவது குறித்துதான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது குறித்துதான் அதிகம் யோசிக்க வேண்டும். நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று உறுதிப்படுத்திக் கொள்வதில் தான் எங்கள் கவனம் இருக்கும் ” என்று கூறியவர்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து “கேப்டனாக இது ஒரு மிகப்பெரிய கௌரவம். கேப்டனாக எனக்கு இது முதல் உலகக் கோப்பை. எனவே நான் மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப்போலவே அணியில் உள்ள மற்றவர்களும் உற்சாகமாக மகிழ்ச்சியாக உள்ளார்கள். நாங்கள் பெர்த்தில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினோம். உலககோப்பை மிகப்பெரிய தொடர் ஆனால் அது குறித்து மட்டுமே பேசிக்கொண்டு இருப்பதை தவிர்க்க நாங்கள் பழகி இருக்கிறோம். ஏனென்றால் இப்படி இருப்பது முக்கியம். நிகழ்காலம் மற்றும் நம் கண் முன்னால் இருக்கும் விஷயங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும் செயல்பட வேண்டும். எனவே எங்களின் இந்த பழக்கம் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை செயல்படுத்த எங்களை அனுமதிக்கும் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் இரண்டு தொடர்களை வென்று இங்கு வந்துள்ளோம். ஆனால் அது சொந்த மண்ணில் கிடைத்த வெற்றி. ஆஸ்திரேலியா வித்தியாசமான சவாலாக இருக்கும். இங்குள்ள சூழலுக்கு பழகுவது மிகவும் முக்கியம். அணியில் உள்ள சில வீரர்கள் இங்கு முன்பு வந்ததில்லை. எனவே நாங்கள் இங்கு முன்கூட்டியே வர விரும்பினோம். இதனால் எல்லா வீரர்களும் சூழல்களுக்கு பழகிக் கொள்ள முடியும். நான் முன்பே கூறியதைப் போல் அணியில் உள்ள எல்லோரும் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் ” என்று தெரிவித்திருக்கிறார்!