ஷிகர் தவானை இந்திய டி20 அணியில் இருந்து நீக்கியது ராகுல் டிராவிட்டின் முடிவு ; காரணம் இதுதான் – பிசிசிஐ அதிகாரி தகவல்

0
81
Shikhar Dhawan and Rahul Dravid

கிரிக்கெட் விளையாட்டில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், அதுபோலவேதான் கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கான வாய்ப்பும். சில வீரர்கள் தங்களின் தனித்திறனால் சில போட்டிகளிலேயே தேசிய அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். சில வீரர்களோ தங்களின் திறமையைத் தேசியில் நிரூபித்து இருந்தும், சிறந்த பார்மில் இருந்தும் சில காரணங்களால் வாய்ப்பைப் பெற முடியாமல் போவார்கள். தற்போது ஷிகர் தவானுக்கு இதில் இரண்டாவதுதான் நடந்திருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்தியா வருகிறது. இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு மட்டும் அல்லாது, மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவிற்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்-ல் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வரும் மூத்த வீரர் ஷிகர் தவானிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் 460 ரன்களை அவர் குவித்திருந்தும் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் இருந்து தற்போது வரை அவர் 400 ரன்களுக்கு மேல்தான் ஒவ்வொரு சீசனிலும் அடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, ராகுல் டிராவிட் பயிற்சியாளராகத் தற்காலிகமாகப் பொறுப்பேற்ற இலங்கை உடனான கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான்தான் கேப்டனாகவும் செயல்பட்டார் என்று குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவருக்கு மீண்டும் இந்திய இருபது ஓவர் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் விமர்சனமாக மாறி இருக்கிறது. தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஷிகர் தவான் குறித்து இந்திய தேர்வாளர்களிடம் முன்கூட்டியே பேசியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்தான செய்தியை பி.சி.சி.ஐ அமைப்பின் அதிகாரி ஒருவர் தற்போது பகிர்ந்திருக்கிறார். அதில் “ஷிகர் தவானைச் தேர்வு செய்யாதது கடினமான முடிவாகும். இருபது ஓவர் கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஷிகர் தவானுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. மேலும் ஷிகர் தவானுக்கான வாய்ப்பு பற்றி எங்களிடம் ராகுல் டிராவிட் முன்பே பேசினார். நாங்கள் அவரிடம் விளக்கி இருந்தோம். அதற்குப் பின்பே ஞாயிற்றுக்கிழமை அணி அறிவிப்பை வெளியிட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்!

எல்லாம் தாண்டி அருமையான பேட்டிங் பார்மில் இருக்கும் 36 வயதான ஷிகர் தவான் வெளியே இருப்பதும், மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் இளைஞர்கள் உள்ளே இருப்பதும் சரியான ஒரு முடிவாக இருக்க முடியாது என்று பல கிரிக்கெட் இரசிகர்கள், முன்னாள் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்!