“கொஞ்சம் விட்ருந்தா சோழிய முடிச்சு விட்ருப்பானுங்க..” – அஸ்வின் பேட்டி!

0
1997

சிறு தவறு நேர்ந்திருந்தாலும் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும் என்று பேட்டியளித்து இருக்கிறார் ஆட்டநாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின்.

வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்து. இதில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது.

மோமினுல் ஹக் 84 ரன்கள் அடிக்க, வங்கதேசம் அணி 227 ரன்கள் ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் ரிஷப் பன்ட்(93) மற்றும் ஷ்ரேயாஸ்(87) இருவரும் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழக்க, இந்தியா 314 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 42/4 என திணறியது. நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா 74/7 என தடுமாறியபோது, அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் 29 ரன்களும் அடித்திருந்தனர். இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். அவர் பேசியதாவது:

நான் இறங்கிய போது எனக்கு பின்னர் பேட்ஸ்மேன்கள் எவரும் இல்லை. நான் தவறு செய்தால் மொத்த அணியும் சரிவை நோக்கி சென்றுவிடும், ஆட்டம் தலைகீழாக முடிந்து விடும். ஆகையால் கட்டாயம் பாட்னர்ஷிப் அமைத்தாக வேண்டும் என எண்ணினேன். ஷ்ரேயாஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் அடித்த சில பௌண்டரிகள் எனக்கு அழுத்தத்தை குறைத்தது.

இது போன்ற ஒரு சூழலில் இயல்பாக யோசிக்காமல், சற்று அதிகமாக யோசிக்க வேண்டும். பவுலர்களை முன்னமே கணித்து அதற்கேற்றார் போல விளையாட வேண்டும். இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. அதேநேரம் பந்து விரைவாகவே தேய்ந்து விடுகிறது என்பதால் அதிலும் கவனம் செலுத்தி பேட்டிங் செய்ய வேண்டும்.

பங்களாதேஷ் பவுலர்கள் குறைத்து எடையை போடக் கூடியவர்கள் அல்ல. எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர்கள். ஆகையால் அவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தேன். இறுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.