நீங்க கிரவுண்ட்க்கு வராதிங்க; அப்பதான் இவர் ரன் அடிக்கறாரு- பிரபல வீரரின் மனைவிக்கு இஷான் கோரிக்கை!

0
304
Ishan kishan

இந்திய அணி தற்போது வெஸ்ட்இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை ஷிகர் தவான் தலைமையில் வென்று விட்டு, தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலையில் இருக்கிறது!

இந்தத் தொடரில் எஞ்சியுள்ள இரு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் ஐசிசி அங்கீகாரம் பெற்ற மைதானத்தில் இன்றும் நாளையும் இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்கி நடக்க இருக்கிறது!

செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டிங் என எல்லாப் பக்கத்திலும் பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறது!

இதன் ஒரு பகுதியாக சூர்யகுமார் யாதவ் வெஸ்ட்இன்டீஸ் தொடரில் துவக்க வீரராகக் களமிறக்கப்பட்டு வருகிறார். முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 13, 9, 6 ரன்கள் என பேட்டிங்கில் நான்காம் வரிசையில் வந்து சோபிக்கவில்லை. இதையடுத்து கடந்த மூன்று டி20 போட்டிகளிலும் முதலிரண்டு ஆட்டங்களில் துவக்க வீரராக 24 [16], 11 [6] என சொற்ப ரன்களே எடுத்தார்.

இந்த நிலையில் சூர்யகுமார் துவக்க வீரராகக் களமிறக்கப்படுவதற்கு முன்னாள் வீரர்கள் பலர் குழப்பமும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் 44 பந்துகளுக்கு 76 ரன்கள் அடித்து, அணியை வெற்றிபெற வைத்து, ஆட்டநாயகன் விருது பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறினார்!

இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய இளம் வீரர் இஷான் கிஷான் சூர்யகுமாரிடம் நகைச்சுவையாகச் சில கேள்விகள் கேட்டிருந்தார். சூர்யகுமார் மனைவிக்கும் ஒரு கலகலப்பான கோரிக்கையை வைத்தார். அதில் இஷான் கிஷான் “தேவிஷா பாபி எங்கள் ஹோட்டல் அறை கட்டணத்தைச் செலுத்திக் கொண்டே இருங்கள். அடுத்த போட்டிக்கு மைதானத்திற்கு வருவதை தாமதாக்கிக் கொள்ளுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். காரணம், சூர்யகுமாரின் இந்தப் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான சதம் அடித்த போட்டியிலும் சூர்யகுமார் மனைவி மைதானத்திற்கு வரவில்லை. அதனால் இஷான் கிஷான் இப்படி விளையாட்டாய் கூறினார்!

இதற்குப் பதிலாய் சூர்யகுமார் கூறுகையில் “பாருங்கள் ஒரு மனிதன் பொய் சொன்னால் அவன் தடுமாறுகிறான் என்று அர்த்தம். நான் டக்-அவுட்டில் கூறியதையே இப்போதும் கூறுகிறேன். உங்கள் துணை மைதானத்தில் இருக்க வேண்டியதில்லை. மனதில் இருந்தால் போதும். அவரின் பெயரை நான் கையில் பச்சை குத்தி வைத்திருக்கிறேன். அவர் மைதானத்திற்கு வராவிட்டாலும், அவரின் சக்தி மைதானத்திற்கு ஊடுருவி வந்து கிடைக்கிறது” என்று அவரும் நகைச்சுவையாய் பதிலளித்தார்!