“இஷான் இரட்டை சதம், தவான் கிரிக்கெட் வாழ்க்கை கதம்” – தினேஷ் கார்த்திக் கருத்து!

0
793

இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்ததால், தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? தினேஷ் கார்த்திக் பேசிய கருத்து தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறியதால், துவக்க வீரராக களம் இறங்குவதற்கு இசான் கிஷன் அழைக்கப்பட்டார்.

- Advertisement -

கிடைத்த இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இஷான், வரலாற்று சாதனையை படைத்து தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்திருக்கிறார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.

210(131) ரன்கள் அடித்து ஆட்டம் இழந்த இஷான், 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடித்து அதிலும் சாதனை படைத்திருக்கிறார். இரட்டை சதம் அடிக்கும் நான்காவது இந்திய வீரர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதிலும் மிகவும் இளமையான இரட்டை சதம் அடித்த வீரர் என்று சாதனையை படைத்தார்.

இப்படி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் இவரை, இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெளியில் அமர்த்தினால் என்ன நடக்கும்? மீண்டும் உள்ளே கொண்டு வந்தால், யாரை வெளியில் அமர்த்த வேண்டும்? என்ற பல்வேறு சிக்கல்களுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“அடுத்து வரவிருக்கும் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில், தவான் எங்கே இருப்பார்? இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் வெளியில் அமர்த்தபட்டால் என்ன நடக்கும்? என்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். அடுத்ததாக சுப்மன் கில் வங்கதேச தொடரில் ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் அணிக்குள் வந்தால், எந்த இடத்தில் பயன்படுத்துவார்? என நினைக்கும்போது சற்று தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் மூவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

ரோகித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்துவிட்டால், நிச்சயம் அவர் விளையாடுவார். மற்றொரு துவக்க வீரராக யார் இருப்பார்? என்று பார்க்கும் பொழுது, தற்போது வரை இஷான் கிஷன் மட்டுமே இருப்பார் என தோன்றுகிறது. இரட்டை அடித்து மிகத் சிறந்த பார்மில் இருக்கிறேன் என நிரூபித்த இவரை வெளியில் அமர்த்த முடியாது. ஆகையால் தவான் மட்டுமே வெளியில் அமர்த்தப்பட வேண்டும்.

இதற்காக தேர்வுக் குழுவினர் பல்வேறு கேள்விகளை சந்தித்து சமாளிக்க வேண்டியது இருக்கும். ஏனெனில் தவான் ஐசிசி போட்டிகளில் எப்படி ஆடியுள்ளார் என தெரியும். மேலும் 2023 உலககோப்பைக்கு அவரை போன்ற அனுபவ வீரர் அணிக்கு எவ்வளவு முக்கியம் எனவும் அனைவரும் அறிவோம்.

யாரை எடுப்பது? யாரை விடுவது? என்பது இந்திய அணிக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அடுத்தடுத்த தொடர்களில் கேப்டனுக்கும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வு குழுவிற்கும் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். இஷான் கிஷன் முதல் விக்கெட் போனபின்பும், ஆட்டத்தை எவ்வளவு நம்பிக்கையாக எடுத்துச்சென்றார். ஆகையால் அவரை இத்துடன் வெளியில் அமர்த்தி விடக்கூடாது. அவரது நம்பிக்கையை தொடர்ந்து வளர்த்து விட வேண்டும். கிடைத்த ஒரு வாய்ப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். இன்னும் சில தொடர்கள் அவர் விளையாடினால் மட்டுமே அதீத மனநிலையை பெறுவார். அந்த வகையில் தவான் வெளியில் இருப்பது தான் சரியாக இருக்கும்.” என்றார்.