இஷான் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் – கேப்டன் ராகுல் பேட்டி!

0
446
Klrahul

பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இழந்துள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களை தோற்று தொடரையும் இழந்திருந்த இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை பிரம்மாண்டமாக வீழ்த்தி இருக்கிறது!

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இந்தத் தொடரில் முதல் வாய்ப்பு பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் 131 பந்துகளில் 210 ரன்களை 24 பௌண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் விளாசி அற்புத தொடக்கத்தையும் நிறைவையும் தந்தார்.

இவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி தனது 44-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சதத்தையும், 72 ஆவது சர்வதேச சதத்தையும் இன்று நிறைவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 409 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். சர்துல் தாக்கூர் மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் “இசான் கிஷான் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து பேட்டிங் செய்ததை பார்ப்பதற்கு அற்புதமான இருந்தது. இசான் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக தைரியமாக ஆடும் நோக்கத்தைக் கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். பேட்ஸ்மேன்கள் மிக தைரியமாக விளையாடினார்கள். பிறகு நாங்கள் இதே தைரியமான முறையில் பந்து வீச்சையும் அமைக்க திட்டமிட்டோம். பந்துவீச்சிக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத போதும் சிறப்பாக பந்து வீசினார்கள். அணியில் சில வீரர்களின் காயம் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் சில வீரர்களுக்கு மேற்கொண்டு இதன் மூலம் வாய்ப்புகள் வழங்குவோம். இப்போது கிடைத்துள்ள இந்த வெற்றி முகத்தை மற்றும் நம்பிக்கையான மனநிலையை டெஸ்ட் தொடருக்கு எடுத்துச் செல்வோம் ” என்று கூறியுள்ளார்!