“இந்தியா நியூசி மோதும் தர்மசாலா பிட்ச் இப்படித்தான் இருக்கிறதா?!” – ஷகிப் அல் ஹசன் பேட்டி!

0
853
Shakip

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இமாச்சல் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் நிலைமையைக் கணித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் நன்றாகவே ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு இப்ராஹிம் ஜட்ரன் விக்கெட்டை வீழ்த்தி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதல் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அங்கிருந்து மொத்தமாக அப்படியே ஆப்கானிஸ்தான் அணி விழுந்தது. 37 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தச் சிறிய இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிக எளிமையாக இருக்கவில்லை.

இமாச்சல் பிரதேசம் தர்மசாலா மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கும் சராசரியாக ஒத்துழைத்தது. அதே நேரத்தில் சுழற் பந்துவீச்சுக்கும் சிறப்பான முறையில் ஒத்துழைத்தது.

- Advertisement -

இதன் காரணமாக மைதானத்தின் பவுண்டரி அளவு சிறியதாக இருப்பது போட்டியில் தாக்கத்தை உருவாக்கவில்லை. இந்த மைதானத்தில்தான் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்ற போட்டி ஒன்று இந்த உலகக் கோப்பை தொடரில் நடைபெற இருக்கிறது.

வெற்றிக்குப் பின் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறும்பொழுது “எங்களுக்கு நாங்கள் விரும்பிய தொடக்கம் கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் எங்கள் அணியின் வீரர்கள் ஒரு விக்கெட் பெற்றால் தொடர்ச்சியாக விக்கெட் பெற முடியும் என நம்பினார்கள். இது எளிதானது கிடையாது ஆனால் நாங்கள் பந்து வீசிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த சில நாட்களாக நாங்கள் மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம். மைதானம் சிறந்ததாக இல்லை என்று எந்த காரணத்தையும் நான் கூறப்போவதில்லை. நிலைமைகளை மீறி சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாங்கள் எங்கள் ஓய்வறையில் பேசினோம்.

எனது பந்து வீச்சில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை தந்தார்கள். சுழற் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். மெகதி, சாந்தோ எங்களுடைய இன்பார்ம் வீரர்கள். அவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!