சுப்மன் கில் சிஎஸ்கே அணிக்குப் போகிறாரா? குஜராத் அணியின் ட்விட்டால் பரபரப்பு!

0
2468
Gill

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 தொடரான ஐபிஎல் தொடர், உலக டி20 தொடர்களில் நம்பர்-1 தொடராக இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி 5 முறை கோப்பையைக் கைப்பற்றி இருந்தாலும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணியே முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லலாம். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அவர்கள்தான் அதிக முறை ப்ளே ஆப் சுற்றுக்கும், இறுதிப் போட்டிக்கும் சென்ற அணியாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு முதன்முதலில் பிளே ஆப் சுற்றுக்கு போகமுடியாத வருடமாக அமைந்தது. ஆனால் அதற்கடுத்து மீண்டெழுந்து வந்த சிஎஸ்கே அணி அடுத்த வருடமே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதற்கு அடுத்த ஆண்டான இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற்றது. இப்படி நடந்த ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டுதான் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பதினான்கு ஆட்டங்களில் வெறும் நான்கு ஆட்டங்களை மட்டுமே சிஎஸ்கே அணி வென்று, ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனதோடு, ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சீசனாக இந்த ஆண்டை பதிந்து கொண்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தை ஆடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு சிஎஸ்கே அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து கேப்டன் பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டார். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எதிர்பார்த்த அளவிற்கு அமையாமல் போக, தொடரின் நடுவிலேயே ரவிந்திர ஜடேஜாவிடம் இருந்த கேப்டன் பொறுப்பை மீண்டும் மகேந்திர சிங் தோனி இடமே சென்னை அணி நிர்வாகம் தந்தது. இதற்கு நடுவில் ஜடேஜா காயமடைந்து இருந்தார். இந்த பிரச்சனையால் மன வருத்தப்பட்டு அவர் அணியில் இருந்து வெளியேறினார். அவர் மனக்காயம் அடைந்ததை குறிப்பிடும்படியாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூசகமாக ஏதாவது ஒன்றை செய்து வந்தார்.

இப்படியெல்லாம் ரவீந்திர ஜடேஜா செய்யும்பொழுது சென்னை அணி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்கப்படும். அப்போதெல்லாம் சென்னை அணி நிர்வாகம் தங்களுக்கும் ரவீந்திர ஜடேஜா வுக்கும் இடையே நல்ல உறவு நிலவி வருவதாக சொல்வார்கள். மேலும் அவர் இந்திய அணியில் குறிப்பிடப்படும்படி விளையாடும் பொழுது அதை பாராட்டும் விதமாக தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவுகள் இடுவார்கள்.

ரவீந்திர ஜடேஜாவின் சொந்த அணி குஜராத் அணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ” நினைவில் கொள்ளவேண்டிய பயணம் இது. உங்களின் அடுத்த முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள் ” என்று சுப்மன் கில்லை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளது.

இது எதற்காக பதியப்பட்டது என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சென்னை அணி ரவீந்திர ஜடேஜா அவை குஜராத் அணிக்கு கொடுத்துவிட்டு, குஜராத் அணியிலிருந்து தொடக்க இளம் வீரர் சுப்மன் கில்லை சென்னை அணிக்கு வாங்க இருக்கிறது என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது எதற்காக பதியப்பட்டது என்று யோசிக்கும் பொழுது, ரசிகர்கள் இப்படி கருதுவதில் தொடர்பு இருப்பது போல் தான் தெரிகிறது. தற்பொழுது இந்த ட்வீட் வேகமாக பலரால் பகிரப்பட்டு வருகிறது. குஜராத் அணியின் ட்விட்டர் செய்தியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!