ஷிகர் தவானின் இந்த இந்திய அணி இரண்டாம் தரமானதா? – தென் ஆப்ரிக்கா கேசவ் மஹராஜ் பரபரப்பு பேச்சு!

0
29174
Ind vs Sa

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை அதிக போட்டிகளில் விளையாட வைக்கவும், அதே சமயத்தில் வீரர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கவும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இரண்டு அணிகளை தயார்செய்யும் நோக்கத்தில் இருக்கிறது.

இந்த செயல்முறையின் முதல் நிலையாக, கடந்த ஆண்டு இந்திய நட்சத்திர வீரர்களைக் கொண்ட ஒரு அணி ரவிசாஸ்திரி பயிற்சியில், விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

அந்த நேரத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியில், ஷிகர் தவான் தலைமையில் ஒரு இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டு இலங்கைக்குச் சென்று தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது.

இதற்கடுத்து ரோகித் சர்மா தலைமையில், ராகுல் டிராவிட் பயிற்சியில் நட்சத்திர வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு செல்ல, இன்னொரு அணி ஹர்திக் பாண்டியா தலைமையில், லக்ஷ்மணன் பயிற்சியில் அயர்லாந்துக்கு சென்று டி20 தொடரில் விளையாடியது.

தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு சென்றுள்ளது. அதே சமயத்தில் ஷிகர் தவான் தலைமையில் லக்ஷ்மன் பயிற்சியில் ஒரு இளம் இந்திய அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணியோடு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதற்கு முன்பு இலங்கைக்கு ஷிகர் தவன் தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் ஒரு இளம் இந்திய அணி சென்ற பொழுது, அந்த அணி இரண்டாம் தரமான அணி, அடிபட்ட ஒரு அணியை அனுப்புவது இலங்கை அணியை அவமானப்படுத்துவது போல என்று, இலங்கை அணிக்காக 96 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் அர்ஜுன ரணதுங்க காட்டமாகப் பேசியிருந்தார்.

தற்போது இப்படிப்பட்ட ஒரு இந்திய அணி உடன் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணியின் துணைக் கேப்டன் கேசவ் மஹராஜ் இது குறித்த தனது கருத்தை மிக தைரியமாகப் வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும் பொழுது
” ஷிகர் தவன் தலைமையிலான இந்த இந்திய அணியை, நான் இரண்டாம் தரமான அணி என்று கருத மாட்டேன். இந்தியாவிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர்களால் முறையான 4 அல்லது 5 சர்வதேச அணிகளைக் கூட ஒரே நேரத்தில் களமிறக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் நாளை போட்டி நடக்கும் மகேந்திர சிங் தோனியின் சொந்த மாநில ராஞ்சி மைதானம் குறித்து பேசப்பட்ட பொழுது
” மகேந்திர சிங் தோனி உடன் விளையாடும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் அமையவில்லை. நான் அவருடன் நிறைய பேச விரும்புகிறேன். அவர் மிகவும் உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தார். அதிலும் குறிப்பாக தலைமை குணத்தில். அவர் களத்தில் அமைதியாக இருப்பது மிகச் சிறப்பான விஷயம். அவரிடமிருந்து மக்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன ” என்று மிக உயர்வாகப் பேசி இருக்கிறார்!