” எதற்கு தேவையில்லாமல் ஓய்வு ? ” விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு ஓய்வு பி.சி.சி.ஐ மீது இர்பான் பதான் விமர்சனம்

0
87
Rohit Sharma Virat Kohli and Irfan Pathan

இங்கிலாந்துச் சென்றுள்ள இந்திய அணி தற்போது கடந்த ஆண்டு தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இங்கிலாந்து அணியிடம் தோற்று இருக்கிறது. அடுத்ததாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை செளதாம்டன் நகரில் துவங்குகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா, டி20 தொடருக்குத் திரும்புகிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய நட்சத்திர வீரர்களுக்கு, முதல் டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது!

இந்த டி20 தொடர் ஜூலை 10ஆம் தேதி முடிவடைய, அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த போட்டி ஜூலை 14, 17 ஆம் தேதிகளில் நடைபெற்று தொடர் முடிகிறது.

- Advertisement -

இதையடுத்து வெஸ்ட் இன்டீஸ் பறக்கும் இந்திய அணி முதலில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது. தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்துச் சென்றிருக்கும் இந்திய அணியின் தேர்வுகுழுத் தலைவர் சேத்தன் சர்மா, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ஆகியோருடன் ஆலோசித்து, வெஸ்ட் இன்டீஸ் ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவித்தார்.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இன்டீஸ் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட இருந்தது. ஆனால் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல கேப்டன்களோடு வேலை செய்ய வேண்டி வந்ததால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இதில் உடன்பாடு இல்லையென்று கூறப்பட்டது. ஆனால் தற்போது சீனியர் வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, மொகம்மத் ஷமி, ஜஸ்ட்பிரீட் பும்ரா ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஷிகர் தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் கொண்டு ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பி.சி.சி.ஐ-யை நாசூக்காகத் தனது ட்வீட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். அதில் அவர் விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து “ஓய்வுலேயே இருப்பதால் ஒரு வீரர் மீண்டும் பார்மிற்கு திரும்ப முடியாது” என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும்தான் சமீபக் காலங்களில் பேட்டிங் பார்ம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்தத் தொடரை முடித்துக்கொண்ட கையோடு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மூன்று டி20 போட்டிகளை வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக வெஸ்ட் இன்டீசிலும், அடுத்து ஆகஸ்ட் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளை வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராகவே அமெரிக்காவின் ப்ளோரிடாவிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கடுத்து ஆகஸ்ட் 27 இலங்கையில் தொடங்கும் ஆசியக் கோப்பையில் விளையாட செல்கிறது இந்திய அணி!