இந்த இளம் வீரர் 2 ஆண்டுகள் தடை பெற்று எவ்வாறு மீண்டு வந்து சாதித்தார் தெரியுமா ? – இர்பான் பதான் வெளிப்படைப் பேச்சு

0
1376
Irfan Pathan about Rasikh Salam

கடந்த புதன்கிழமை ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில், ரோகித் சர்மா இசான் கிசானை உமேஷ்யாதவ் தன் பாஸ்ட் அன்ட் ஸ்விங்கில் தடுமாற வைத்துக்கொண்டிருந்த பொழுது, எதிர்முனையிலிருந்து பந்துவீசிய ஒரு 22 வயது இளைஞரும் கவனம் ஈர்த்தார்!

அவர்தான் காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளைஞர் ராசிக் சலாம். ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடும் இவரை அடையாளம் கண்டுபிடித்தது முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான். அவருடைய வேகம், இருபுறமும் பந்தைத் திருப்பும் திறன், அவரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

ஐ.பி.எல்-ல் மும்பை அணிக்காக ராசிக் சலாம் வாங்கப்பட்ட ஆண்டே மும்பை சாம்பியனும் ஆகிறது. ஆனால் அதற்கடுத்த இரண்டாண்டுகளுக்கு மேலான காலங்கள் அவருக்கு நல்லதாய் அமையவில்லை. காரணம், வயதைக் குறைத்துக் காட்டிய குற்றச்சாட்டில், அவரை 2020 ஜனவரியில் இரண்டாண்டுகள் விளையாட பி.சி.சி.ஐ தடை விதித்திருந்தது!

அவரைப்பற்றியும் இதுக்குறித்தும் 2018ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் அணிக்கு மென்டராய் இருந்த இர்பான் பதான் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். “அவர் மிகச்சிறந்த பவுலர். பந்தை இருபுறமும் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். வேகமாக வீசும் அவரின், மெதுவான பந்துகளும் சிறப்பானது. தடைக்காலம் அவரது வாழ்வில் மிகக் கடினமானது. ஆனால் அந்த இரண்டாண்டுகளில் அவர் பயிற்சிகளில் இருந்து விலகாமல் தொடர்ந்து உழைத்தார். இன்று அதற்கான பலனை பெறுகிறார்” என்று தெரிவித்தார்.

கிரிக்கெட்டரும் அவரது உறவினருமான நதீம் டரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “அவர் தடைவாங்கி எங்கள் ஊர் குலஹமிற்கு வரும்பொழுது, அவர் திரும்பி எழ முடியாதென்றே இங்குள்ள சிலர் நினைத்தார்கள். ஆனால் அவர் கடுமையாக உழைத்துத் திரும்பி வந்திருக்கிறார். அவருக்குக் குடும்பம் நல்ல ஆதரவை வழங்கியது” என்று குறிப்பிட்டார்!