17 வது ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு இன்னும் ஆறு நாட்கள் இருக்கின்றன. நாட்கள் நெருங்க நெருங்க ஐபிஎல் தொடர் குறித்தான எதிர்பார்ப்பும் உற்சாகமும் ரசிகர்கள் மட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரசிகர்களைப் போலவே முன்னாள் வீரர்களும் ஐபிஎல் தொடர் குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மேலும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரை வைத்து டி20 உலக கோப்பைக்கு அணியை தேர்வு செய்ய மாட்டோம் என்று இந்தியத் தேர்வுக்குழு தரப்பில் செய்திகள் வந்திருந்தாலும், அதே செய்தியில் மோசமாக யாராவது விளையாடினால் அவர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.
எப்படி எடுத்துக் கொண்டாலும் இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாட வேண்டிய அவசியம் இந்திய வீரர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக சிவம் துபே போன்ற வீரர்களின் இடம் இன்னும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் சிறப்பாக தங்களை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் மூத்த வீரர் மெஷின் விராட் கோலி ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் அவரை இந்திய உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றும், தற்பொழுதே அவரை தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது.
ஐபிஎல் தொடரை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் 2016 ஆம் ஆண்டு விராட் கோலி ஒரே சீசனில் மட்டும் 81 ஆவரேஜ், 152 ஸ்டிரைக் ரேட், நான்கு சதங்கள் உடன் 973 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்திருந்தார். இவருக்குப் பிறகு ஒரு ஐபிஎல் சீசனில் 900 ரன்களை எட்டிய வீரர்கள் வேறு யாருமே கிடையாது. கில் மட்டுமே 890 ரன்கள் வரை முன்னேறி இருக்கிறார்.
விராட் கோலி குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” முதலில் விராட் கோலி மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பார். மேலும் அவர் மிகவும் உடல் தகுதி கொண்டவர். இது எதிரணிகளுக்கு மிகவும் ஆபத்தாக போய் முடியும். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பார். 2016ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு மிகச் சிறந்த ஐபிஎல் சீசன் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2024 2வது பகுதி வெளிநாட்டுக்கு மாற்றப்படுகிறதா?.. பிசிசிஐ தரப்பில் வெளியான புதிய செய்தி
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு அவருடைய ஐபிஎல் செயல்பாடுகள் ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கங்களோடு இருந்திருக்கிறது. அவர் ரன்களை எடுத்தாலும் கூட ஒரே ஆண்டில் இவ்வளவு ரன்களை எடுத்தது கிடையாது. அவர் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்க வில்லை. அதே சமயத்தில் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 2016 ஆண்டு ஐபிஎல் தொடரில் செய்ததை அவர் மீண்டும் செய்வார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.