உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசை வெளியேற்றி அதிர்ச்சியளித்தது அயர்லாந்து!

0
313
T20iwc2022

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று தொடரின் தகுதி சுற்றுப் போட்டி பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நாக்அவுட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இதன்படி துவக்க ஆட்டக்காரராக வந்த கையில் மேயர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த லீவிஸ், சார்லஸ் இருவரும் கொஞ்சம் பொறுமை காட்டினார்கள், ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. இருவரும் 13, 24 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து களத்திற்கு வந்த பிரண்டன் கிங் ஆஸ்திரேலிய மைதானங்களில் எப்படி தரையோடு விளையாட வேண்டும் என்று சக வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு பாடம் எடுத்து விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் வழக்கம்போல் எந்த நேரத்தில் ஆட்டமிழக்க கூடாதோ அந்த நேரத்தில் ஆட்டமிழந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவுக்கு மிகமுக்கிய பாதையை வகுத்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற பிரண்டன் கிங் 48 பந்துகளில் 62 ரன்களை 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்தது. துணை கேப்டன் பாவெல் 6, ஓடியன் ஸ்மித் 19* ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஆன்டி பால்போர்னி மற்றும் பால் ஸ்டெர்லிங் இருவரும் அதிரடியில் அமர்க்களப் படுத்தினார்கள். முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் வந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆன்டி பால்போர்னி 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து விளையாட வந்த டக்கர், பால் ஸ்டெர்லிங் உடன் இறுதிவரை களத்தில் நின்று 17.3 ஓவர்களில் அயர்லாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவர் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டெர்லிங் 48 பந்துகளில் 66 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அயர்லாந்து அணி ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள குழுவிற்கு செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாபமாகத் தகுதிச்சுற்றோடு வெளியேறியது!