மழையால் மோசம்போன இங்கிலாந்து; அயர்லாந்திடம் மண்ணை கவ்வியது!!

0
2094

இங்கிலாந்து அணியை டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி வீழ்த்தியுள்ளது அயர்லாந்து அணி

டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்று நடைப்பெற்று வருகிறது. குரூப் 1இல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று விளையாடின. மெல்பர்ன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

- Advertisement -

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அயர்லாந்து அணிக்கு துவக்க வீரர்களாக ஸ்டெர்லிங் மற்றும் கேப்டன் பால்பிர்னே இருவரும் களமிறங்கினார். ஸ்டிர்லிங் 14 ரன்கள் ஆட்டம் இழந்தார். பால்பிர்னே மற்றும் டக்கர் இருவரும் நிலைத்து விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கேப்டன் பால்பிர்னே 47 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். டக்கர் 27 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட் இழக்க, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 157 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர் ரன் ஏதுமின்றி ஆட்டம் இழந்து வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்ஸ் வெறும் ஏழு ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மலான் 37 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆக, இங்கிலாந்து அணி சற்று திணறி வந்தது.

- Advertisement -

மொயின் அலி நம்பிக்கை அளிக்கும் விதமாக 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்தார். லிவிங்ஸ்டன் ஒரு ரன் அடித்து களத்தில் இருந்தார். 14.3 ஓவர்களில் 105 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் இழந்திருந்தது இங்கிலாந்து.

போட்டியின் நடுவே மழையின் குறுக்கீடு காரணமாக சிறிது நேரம் தள்ளி சென்றது. ஒரு கட்டத்தில் மழையால் ஆட்டம் தடைபடும் நிலை ஏற்பட்டது. அத்த தருணத்தில் டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ரன்கள் பின்தங்கி இருந்தது.

கடைசிவரை மழை நிற்காததால் அயர்லாந்து அணி டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல்முறையாக இங்கிலாந்து அணியை உலக கோப்பை தொடரில் வீழ்த்திய வரலாறு அயர்லாந்து அணிக்கு அமைந்திருக்கிறது. இதனால் வீரர்கள் துள்ளி குதித்து மைதானத்தில் இருந்த அயர்லாந்து ரசிகர்களுக்கு கண்ணீருடன் நன்றி கூறி மைதானத்திலிருந்து விடைபெற்றனர்.