ஐ.பி.எல் 2021ல் பிசிசிஐ அமல்படுத்தி உள்ள 5 புதிய விதிகள்

0
53868
IPL 2021 new rules

விவோ ஐ.பி.எல் 2021 கோலாகலமாக தொடங்கியது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு சமமாக ஐ.பி.எல் தொடர் காணப்படுகிறது. எல்லா வருடமும் தவறாமல் நடைபெற்று வந்த தொடர் சென்ற ஆண்டு கொரோனா தொற்றால் தள்ளிவைகப்பட்டது. பின்னர் துபாயில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. சென்ற வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் விதிகளின் மேல் பல சர்ச்சைகள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்தியா–இங்கிலாந்து தொடரிலும் கிரிக்கெட் விதிகளின் மேல் கேள்விகள் எழும்பின.

அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ புதிதாக 5 விதிகளை அமல்படுத்தி உள்ளது. அந்த விதிகளும் அனைத்தும் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

1. சாப்ட் சிக்னல் ரத்து:

சாப்ட் சிக்னல் எனும் இந்த விதியை அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும் சமீபக் காலத்தில் எதிர்த்தனர். பேட்ஸ்மேன் அவுட்டா அல்லது நாட் அவுட்டா என்ற சந்தேகம் எழும்போது நடுவர் தன்னுடைய முடிவைத் தெரிவித்த பிறகு மூன்றாவது நடுவரிடம் கேட்பார்.


மூன்றாவது நடுவர் அந்த வீடியோ காட்சியை பல முறை பார்த்தும் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை எனில், மைதானத்தில் உள்ள நடுவரின் முடிவே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்குப் பெயரே சாப்ட் சிக்னல்.

- Advertisement -

தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இந்நூற்றாண்டில் இது போன்ற விதிகள் ஏற்றுக் கொள்ளப்படாதவை. அதனால் பிசிசிஐ இந்த சாப்ட் சிக்னல் விதியை ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கி உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

2. நேரக் கட்டுப்பாடு:

பந்துவீசும் அணி 20 ஓவர்களை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும். இதற்கு முன்னர் இருந்த விதியில் ஒரு அணிக்கு ஏறத்தாழ 100 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இது தான் பிசிசிஐ அறிவித்த இரண்டாவது புதிய விதி.

இந்த விதியை ஏதேனும் அணி மீறினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் இந்த விதியை மீறினால், அந்த அணியின் கேப்டன் அடுத்தப் போட்டியில் விளையாட தடை செய்யப்படுவார்.கேப்டனை நம்பி இருக்கும் பெங்களூர் , பஞ்சாப் , ஹைதராபாத் அணிகளுக்கு இவ்விதி மிகுந்த சோகத்தை உள்ளாக்கும்.

3. ஷார்ட் ரன் விதி:

ஐ.பி.எல் 2020ல் பஞ்சாப்–டெல்லி அணிகளிடையே நடந்தப் போட்டியில் நடுவரின் தவறான முடிவால் பஞ்சாப் அணி அப்போட்டியில் தோல்வியை தழுவியது. நடுவரின் தவறான முடிவுக்கு பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனால் இந்த வருடம் பிசிசிஐ அந்தப் பொறுப்பை மூன்றாவது நடுவரிடம் ஒப்படைத்துள்ளது. பேட்ஸ்மேன் ஷார்ட் ரன் எடுத்தால், அதை தகுந்த ஆதரங்களோடு மூன்றாவது நடுவர் முடிவு செய்து பின்னர் அறிவிப்பார்.

4. நோ-பால் ரத்து செய்தல்:

2019 ஐ.பி.எலில் நடுவர்கள் நோ-பால்களை சரியாக கவனிக்கவில்லை என்று பலர் தெரிவித்தனர். அதனால் இம்முறை, ப்ரண்ட்-ஃபூட் நோ-பால் இருந்தால் அதை மூன்றாவது நடுவர் தான் அறிவிப்பார்.

அதே போல் காலத்தில் உள்ள நடுவர் தரும் நோ-பாலை, மூன்றாவது நடுவரால் ரத்து செய்ய முடியும். இந்த விதி சமீப காலங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

5. சூப்பர் ஓவர் விதி:

சென்ற ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஒரு விசித்திரமான போட்டியை நாம் கண்டோம். பஞ்சாப்–மும்பை அணிகளுக்கு இடையே இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. அப்போது நடுவர்கள் மத்தியிலேயே பல குழப்பங்கள் ஏற்ப்பட்டன.

தற்போது பிசிசிஐ நிர்வாகம் புதியதோர் விதியை அமல்படுத்தி உள்ளது. அதாவது போட்டி சமன் ஆனப்பிறகு ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். இனிசூப்பர் ஓவர் போட்டிகள் காரசாரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.