“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் திடீர் விலகல்”!

0
1051

ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது . முதலாவதாக நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வருகிற ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியை 3-1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிடும் .

- Advertisement -

காயம் காரணமாக முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறாதது இந்தியா அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது . இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவில்லை . இந்நிலையில் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பாக அடி வரும் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கு முன்பாக முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்தத் தொடரில் இருந்து விலகினார் . பின்னர் அவர் அணி மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைகளோடு பயிற்சியும் எடுத்து வந்தார் . முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவுறுத்தியுள்ளது .

முதுகு வலி பிரச்சனைக்காக அவர் வலி நிவாரணிகளையும் ஊசி மருந்துகளையும் எடுத்துக் கொண்ட போதும் கீழ் முதுகு வலி குறையவில்லை . இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவர்கள் அவரை இரண்டு வாரங்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள் . இதனைத் தொடர்ந்து அவர் முதல் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் இருந்து விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் டி20 ஸ்டார் சூரியகுமார் யாதவ் தனது முதல் டெஸ்ட் அறிமுக போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு திரும்பி இருக்கிறார் .

இவர் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக ஆடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு தனது உடல் தகுதியையும் நிரூபித்து இருக்கிறார் . இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா நாக்பூரில் இந்திய அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு பயணத்தை தொடங்கியது. மேலும் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜாவுக்கு விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவர் தாமதமாக அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது .