டி20 உலகக் கோப்பை அரை இறுதி ; திக் திக் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி!

0
706
IndvsAus

மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன!

இன்று தென் ஆப்பிரிக்கா கேப் டவுன் மைதானத்தில் முதல் அரை இறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தினர்!

- Advertisement -

டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆஸ்திரேலியா அணி முதல் விக்கட்டுக்கு 52 ரன்கள் சேர்க்க அலைசா ஹீலி வெளியேறினார். மற்றுமொரு துவக்க வீராங்கனை மூனி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மேக் லானிங் 34 பந்தில் 49 ரண்களும், கார்டனர் 18 பந்தில் 31 ரண்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 172 ரண்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2, செபாலி வர்மா 9, யாஷிகா பாட்டியா 4 ரண்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

ஆனால் இதற்குப் பிறகு ஜெமிமா ரோட்டரிக்குஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்துச் சென்றனர். ஜெமிமா 24 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இன்னொரு முறையில் நின்ற கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அப்பொழுது இந்திய அணிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க 32 பந்துகளில் 39 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. ஆஸ்திரேலியா வீராங்கனைகளின் அபார பந்துவீச்சு மற்றும் மிக அபாரமான பீல்டிங்கால் இந்திய வீராங்கனைகளால் எதுவுமே செய்ய முடியவில்லை. இறுதியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு மற்றும் ஒரு முறை முன்னேறியது!